மக்கள் வழங்கிய ஜனநாயக ஆணை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது - மாணிக்கம் தாகூர்

மாற்றத்திற்கும், நல்லாட்சிக்கும், மக்கள் நம்பிக்கைக்கும் கிடைத்த மகத்தான வெற்றி என மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
மக்கள் வழங்கிய ஜனநாயக ஆணை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது - மாணிக்கம் தாகூர்
Published on

சென்னை,

தமிழக சட்டசபையில் தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் விஜய் கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானம் மீதான விவாதத்திற்கு பிறகு வாக்கெடுப்பு நடைமுறை தொடங்கியது. உறுப்பினர்களை எண்ணிக் கணிக்கும் நடைமுறைப்படி வாக்கெடுப்பு நடத்தப்படும் என சபாநாயகர் அறிவித்தார். வெளியில் சென்ற உறுப்பினர்களை அவைக்கு அழைக்கும் வகையில் 3 முறை மணி ஒலிக்கப்பட்டது. பின்னர் பேரவையின் நுழைவு வாயில்கள் அனைத்தையும் மூடும்படி அவைக்காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். கதவுகள் மூடப்பட்டதும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

தீர்மானத்திற்கு ஆதரவாக 144 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். 22 எம்.எல்.ஏ.க்கள் எதிராக வாக்களித்தனர். 5 எம்.எல்.ஏ.க்கள் நடுநிலை வகித்தனர். இதையடுத்து தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார். வாக்கெடுப்பின் போது திமுக எம்.எல்.ஏ.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

144 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்க வைத்தது. இது குறித்து, காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிட்டுப்பதாவது;-

மக்கள் வழங்கிய ஜனநாயக ஆணை இன்று சட்டப்பேரவையில் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.

144 ஆதரவு வாக்குகளுடன் முதல்-அமைச்சர் விஜய் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார். எதிராக 22 வாக்குகள். இது ஒரு சாதாரண வெற்றி அல்ல.. மாற்றத்திற்கும், நல்லாட்சிக்கும், மக்கள் நம்பிக்கைக்கும் கிடைத்த மகத்தான வெற்றி.

தமிழ்நாடு வென்றது. ஜனநாயகம் வென்றது. நாளை வெற்றி நமதே! 🤝

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com