கோவில் தணிக்கை அறிக்கைகளை 2 மாதங்களில் பதிவேற்றுவதாக ஐகோர்ட்டில் அறநிலையத்துறை உறுதி

6,931 கோவில்களின் தணிக்கை அறிக்கை விவரங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஐகோர்ட்
Published on: 

சென்னை,

தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கோவில்களின் வரவு, செலவு மற்றும் நிதி நிர்வாகம் தொடர்பான தணிக்கை அறிக்கைகள் பொதுமக்களின் பார்வைக்கு முழுமையாகக் கிடைக்காத நிலையில், அவற்றை இணையத்தில் பதிவேற்றும் பணியை இன்னும் இரண்டு மாதங்களுக்குள் செய்து முடிக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை ஐகோர்ட்டில் அவகாசம் வழங்கியுள்ளது.

சென்னை ஐகோர்ட்

கோவில்களின் நிதி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், அனைத்து கோவில்களின் தணிக்கை அறிக்கைகளையும் இணையதளத்தில் வெளியிட உத்தரவிடக் கோரி, டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் இ.மனோகரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, அறநிலையத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், 6,931 கோவில்களின் தணிக்கை அறிக்கை விவரங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. எஞ்சிய கோவில்களின் அறிக்கை விவரங்களும் விரைவில் பதிவேற்றப்படும் என்றும், முழுமையான தணிக்கை அறிக்கைகள் பின்னர் வெளியிடப்படும் என்றும் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

விசாரணை

இந்நிலையில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஆஜரான மனுதாரர் டி.ஆர்.ரமேஷ், முழுமையான தணிக்கை அறிக்கைகள் இன்னும் பதிவேற்றப்படவில்லை என்றும், தற்போது வெளியிடப்பட்டுள்ள விவரங்களில் கூட இடம்பெற வேண்டிய முக்கிய தகவல்கள் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து, தணிக்கைக்கு உட்பட்ட கோவில்களின் அறிக்கை விவரங்கள் இணையத்தில் பதிவேற்றும் பணியை இரண்டு மாதங்களுக்குள் முடித்துவிடுவதாக அறநிலையத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு வக்கீல் தெரிவித்தார். அவரது வாக்குறுதியைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கை டிசம்பர் 18-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

X