

சென்னை,
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
“கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கிளைச் சிறையில், குட்கா புகையிலை விற்பனை தொடர்பான புகாரில் அடைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன், சிறைத்துறையினரின் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
அவரது உடலில் 19 இடங்களில் காயங்கள் இருப்பதும், அவர் சித்ரவதை செய்து படுகொலை செய்யப்பட்டிருப்பதும் உடற்கூறாய்வு அறிக்கையின் மூலம் அம்பலமாகியுள்ளது. மாற்றுத்திறனாளி என்றும் பாராமல் நிகழ்த்தப்பட்டுள்ள இந்த கொடூர அராஜகப் போக்கை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தமிழகத்தில் தொடரும் காவல் நிலைய மற்றும் சிறை மரணங்கள், காவல்துறையினரின் அதிகார துஷ்பிரயோகம், முறையற்ற விசாரணை முறைகள் மற்றும் பொறுப்புக்கூறல் இன்மையையே மீண்டும் மீண்டும் பிரதிபலிக்கின்றன. காவல்துறையில் மனிதாபிமானமற்ற செயல்களுக்கும், இத்தகைய முறையற்ற காட்டுமிராண்டித்தனமான நடைமுறைகளுக்கும் எவ்வித இடமும் அளிக்கக் கூடாது. காவல்துறை என்பது மக்களின் பாதுகாவலராக இருக்க வேண்டுமே தவிர, அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறும் அவலம் இனிமேலும் தொடரக் கூடாது. தமிழகத்தில் இனி ஒரு காவல் மரணம் கூட நிகழாத நிலையை உருவாக்க அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
உயிரிழந்த சபரிவர்மனின் குடும்பம் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையில், தமிழக அரசு உடனடியாக அக்குடும்பத்திற்கு உரிய அரசு வேலை மற்றும் தகுந்த நிவாரண உதவி வழங்கிட வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன். இச்சம்பவத்தை அரசு மிகத் தீவிரமாக எடுத்துக்கொண்டு, தவறு செய்த காவலர்கள் மற்றும் சிறைத்துறை ஊழியர்கள் மீது கடுமையான துறைரீதியான மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகளை உடனடியாக உறுதி செய்ய வேண்டும்.
அப்பாவிகள் மீது தாக்குதல், சித்ரவதை மற்றும் காவல் மரணங்களுக்கு காரணமான அனைத்து காவலர்கள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்கள் தப்பவிடாமல் மிகக் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். மேலும், ஒவ்வொரு காவல் மற்றும் சிறை மரணங்கள் குறித்தும் முறையான, வெளிப்படையான நீதித்துறை விசாரணை கட்டாயமாக்கப்பட வேண்டும்.
இத்தகைய மரணங்களைத் தடுக்கவும், தமிழக காவல்துறையின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகளைக் களையவும் அவசர அவசியமாக உறுதியான காவல்துறை சீர்திருத்தங்களை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். காவல்துறை மக்களின் பாதுகாவலராகச் செயல்படுவதை உறுதி செய்யும் வகையில், தமிழக அரசு உடனடியாக இது குறித்து ஆலோசித்து, காவல் நிலைய மரணங்களை முற்றிலும் தடுக்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.