துணை மேயர் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி

திருப்பரங்குன்றத்தில் உள்ள மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலக வாசலில் துணை மேயர் முன்பு பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
துணை மேயர் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி
Published on

திருப்பரங்குன்றம், 

மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலம் 5-ல் முதல்முறையாக பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு மேற்கு மண்டல தலைவர் சுவிதாவிமல் தலைமை தாங்கினார். உதவி ஆணையர் தட்சிணாமூர்த்தி, மாநகராட்சி கவுன்சிலர்கள் முன்னிலை வகித்தனர்.முகாமில் சிறப்பு அழைப்பாளர்களாக மதுரை மாநகராட்சி மேயர இந்திராணி, துணைமேயர் நாகராஜ் ஆகியோர் கலந்துகொண்டு குறை தீர்க்கும் முகாமை தொடங்கி வைத்து பொதுமக்களிடையே மனுக்கள் பெற்றனர். முகாமில் வீட்டு வரி பெயர் மாற்றுதல், இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை கேட்டல் தொடர்பாக 73 மனுக்கள் கொடுத்தனர். மனுக்கள் யாவும் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு உரியவர்களுக்கு ரசீது வழங்கப்பட்டது. 73 மனுக்களில் சொத்துவரி தொடர்பான 2 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மற்ற 71 மனுக்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது. முகாம் முடிந்த நிலையில் மேயர் அங்கு இருந்து புறப்பட்டு சென்றார். துணை மேயர் புறப்பட தயாரானார். அப்போது திருப்பரங்குன்றத்தை சேர்ந்த பிரேமலதா (40) என்பவர் மண்எண்ணெய் கேனுடன் அங்கு வந்தார். பின்னர் அவர் மண்டல அலுவலக வாசல் முன்பு கேனை திறந்து மண்எண்ணயை தன் மீது ஊற்றினார்.

இதை பார்த்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பிரேமலதாவிடமிருந்து கேனை பிடுங்கி எறிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தற்கொலைக்கு முயன்ற அந்த பெண்ணிடம் துணை மேயர் நாகராஜ் விசாரித்தார். விசாரணையில் திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி. ரோட்டில் உள்ள வெயிலு உகந்த அம்மன் கோவில் வளாகத்தில் பல ஆண்டுகளாக பூக்கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறோம். வியாபாரத்தில் கிடைக்க கூடிய வருமானத்தில் தான் 2 மகன்களையும் படிக்க வைத்து வருகிறேன்.ஆனால் கடந்த சில நாட்களாக அந்த பகுதியை சேர்ந்தவர் கடையை காலி செய்ய சொல்லி வருகிறார். அதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மனஉளைச்சலுக்கு ஆளாகிவிட்டேன்..எங்கள் குடும்ப வாழ்வாதாரத்துக்கு உரிய இடத்தில் பூக்கடை வைக்க அனுமதி வழங்க வேண்டும் என்றார்.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரியிடம் விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு துணை மேயர் உத்தரவிட்டார். இதற்கிடையே மாநகராட்சி மண்டல அலுவலர் புகாரின் பேரில் திருப்பரங்குன்றம் போலீசார் பிரேமலதா மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com