

ஈரோடு,
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஈரோட்டில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் மகளிர் ஓட்டின் அடிப்படையிலேயே தி.மு.க. தோல்வி அடையும். மகளிருக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாகவும் டாஸ்மாக் பூங்காவாகவும் தமிழகம் மாறி இருக்கிறது. டாஸ்மாக், போதைப்பொருள் தான் இந்த ஆட்சியின் முடிவுக்கு காரணமாக இருக்கப்போகிறது.
தேர்தலுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தமிழகத்தை அமைதி பூங்காவாக மாற்றும். எங்கள் கூட்டணி வெற்றி கூட்டணியாக உள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி உடன்பாடு குறித்து சுமுகமாக பேசி வருகிறோம். இன்னும் 2 வார கால அவகாசம் உள்ளது. தொகுதி எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
தி.மு.க. கூட்டணிக்குள் முரண்பாடு உள்ளது என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது. தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி ஒட்ட வைத்த கண்ணாடி, அதில் முகம் பார்க்க முடியாது. அ.தி.மு.க., தலைமையிலான அணிதான் மக்கள் நம்பிக்கை பெற்ற அணி. இவ்வாறு அவர் கூறினார்.