திமுக அரசால் பேராசிரியர்களுக்கு சம்பளம் வழங்க இயலாத நிலை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு


திமுக அரசால் பேராசிரியர்களுக்கு சம்பளம் வழங்க இயலாத நிலை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
x

10க்கும் மேற்பட்ட பல்கலை.களில் துணைவேந்தர் பதவிகள் 2 ஆண்டுகளாக காலியாக உள்ளன என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை

பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க இயலாத திமுக ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-

துணை வேந்தர் நியமனங்கள் தாமதிக்கப்படுவதால், அண்ணா, அண்ணாமலை, சென்னை, மதுரை காமராஜர், பாரதியார், பாரதிதாசன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் பதவிகள் கிட்டத்தட்ட 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை காலியாக உள்ளன. தேவையற்ற வழக்குகளுக்கு, உச்சநீதிமன்றம் சென்று இந்தியாவிலேயே சிறந்த வழக்கறிஞர்களைக் கொண்டு வாதாடும் இந்த விளம்பர மாடல் அரசு, தமிழக இளைஞர்களின், மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் உயர்கல்வித் துறையின் வழக்குகளை ஏன் முடிக்க முயலவில்லை என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இரண்டு ஆண்டுகளாக இப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை.

நிதிப் பற்றாக்குறை மற்றும் ஊதியப் பிரச்சினைகளால் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 2 ஆண்டுகளாக பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு ஊதியம்/ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் நியமன முறைகேடுகள் மற்றும் ஊதியப் பிரச்சினைகள் குறித்து புகார்கள் எழுந்துள்ளன. மகளிர் ஆய்வு மையம் உள்ளிட்ட பல இடங்களில் 6 மாதங்களுக்குமேல் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. தற்போது, சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த மாதம் சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை என்று போராடி வருவதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.

'கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை'

என்ற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப, நம் மாணவச் செல்வங்களுக்கு அழியாத கல்விச் செல்வத்தை கொடுப்பவர்கள் ஆசிரியர்கள் எனும் ஆசான்கள். அந்த தெய்வங்களின் வயிற்றில் அடிக்கும் வேலையில் இந்த விளம்பர மாடல் ஆட்சியாளர்கள் இறங்கியுள்ளது மன்னிக்க முடியாத கொடுஞ் செயல். தன்னலமில்லாமல் அறிவை அள்ளி வழங்கும் ஆசிரியப் பெருமக்களின் எரியும் வயிறு, இந்த ஆட்சியாளர்களை சுட்டெரிக்காமல் விடாது என்று எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story