இளைஞர்களின் அரசு வேலைக் கனவைப் பறிக்கும் திமுக அரசின் ஆட்சிக் கனவும் பறிக்கப்படும் - நயினார் நாகேந்திரன்

கல்லூரி மாணவர்களின் படிப்பையும் பாழாக்குவது தான் திமுக அரசின் இளைஞர் நலனா? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இளைஞர்களின் அரசு வேலைக் கனவைப் பறிக்கும் திமுக அரசின் ஆட்சிக் கனவும் பறிக்கப்படும் - நயினார் நாகேந்திரன்
Published on

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

பல ஆண்டுகள் இழுத்தடிப்புக்குப் பின், கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற உதவிப் பேராசிரியர் தேர்வின் முடிவை நிதி நெருக்கடி காரணமாக திமுக அரசு வெளியிடாததாக வெளிவந்துள்ள தகவல் அதிர்ச்சியளிக்கிறது.

ஐந்தாண்டுகளாக தேர்வை நடத்தாமல் ஒத்திவைப்பதும், தேர்தல் காலம் வந்ததும் கண்துடைப்புக்காக ஒரு தேர்வை நடத்துவதும், பின் தேர்வு முடிவை வெளியிடாமல் மெத்தனமாக இருந்து, பட்டதாரிகளின் வேலைவாய்ப்பையும், கல்லூரி மாணவர்களின் படிப்பையும் பாழாக்குவது தான் திமுக அரசின் இளைஞர் நலனா?

வெற்று பிரம்மாண்ட விழாக்கள் நடத்துவதிலும், தினமொரு விளம்பரம் வெளியிடுவதிலும் வாரி வாரி பணத்தை இறைக்கும் திமுக அரசுக்கு, 2,708 உதவிப் பேராசிரியர்களுக்குப் பணியாணை வழங்கி, சம்பளம் வழங்க நிதியில்லையா என்ன?

மொத்தத்தில், "கனவைச் சொல்லுங்க" என்று தெருதோறும் கேட்டுவிட்டு, தமிழக இளைஞர்களின் அரசு வேலை கனவைச் சிதைக்கும் திமுக அரசின் 'மீண்டுமொரு முறை ஆட்சியைப் பிடிக்கும்' கனவும் நிறைவேறாது!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com