பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை தி.மு.க. ஏமாற்றி விட்டது - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை தி.மு.க. ஏமாற்றி விட்டது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டினார்.
பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை தி.மு.க. ஏமாற்றி விட்டது - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
Published on

பேரையூர்,

டி.கல்லுப்பட்டி அருகே உள்ள டி.குன்னத்தூர் ஜெயலலிதா கோவிலில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசும்போது கூறியதாவது:-

தி.மு.க. தற்போது திசைமாறிச் செல்கிறது. அதனை சரியான பாதையில் கொண்டு செல்லும் வகையில் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை மக்கள் அ.தி.மு.க.வுக்கு வழங்கியுள்ளார்கள். இன்றைக்கு தி.மு.க. ஜனநாயகத்தை குழி தோண்டும் வகையில் செயல்படுகிறது. இந்த அரசுக்கு கடிவாளம் போடும் வகையில் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து வருகிற 28-ந் தேதி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

தேர்தல் பிரசாரத்தில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட்தேர்வை ரத்து செய்வோம் வாக்குறுதி அளித்தனர். ஆனால் இன்றைக்கு நீட் தேர்வு உறுதி, அதற்கு மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். வாக்களித்த மக்களை தி.மு.க.வினர் வஞ்சித்து விட்டனர். மேலும் பெட்ரோல், டீசல், விலை குறைக்கப்படும், பெண்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்து விட்டு தற்போது தி.மு.க. அமைதி காக்கிறது.

தற்போது அ.தி.மு.க. தொண்டர்கள் மீதும், நிர்வாகிகள் மீதும் பொய்யான வழக்கு தொடுத்து மலிவான அரசியலை தி.மு.க. செய்கிறது. அ.தி.மு.க.வை அழித்துவிடலாம் என்று தி.மு.க. பகல் கனவு காண்கிறது. இதுபோன்ற பல்வேறு அடக்குமுறைகளை அ.தி.மு.க. தகர்த்தெறிந்து உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com