எடப்பாடி பழனிசாமி அரசு, இன்று 5-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது 20 ஆயிரத்து 500-க்கும் அதிகமான கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார்

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, இன்று (செவ்வாய்க்கிழமை) 5-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் 20 ஆயிரத்து 500-க்கு அதிகமான கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி அரசு, இன்று 5-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது 20 ஆயிரத்து 500-க்கும் அதிகமான கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார்
Published on

சென்னை,

தமிழக முதல்-அமைச்சராக கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ந் தேதி எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு பதவி ஏற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்து, இன்று (செவ்வாய்க்கிழமை) 5-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி வகித்த கடந்த 4 ஆண்டுகளில் ஏராளமான நலத்திட்டங்கள் தமிழக மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

அரசு துறைகள் அனைத்திலும் பணிகள் முடுக்கிவிடப்பட்டு, தொடர்ந்து வேகமாக திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பான எந்த கோப்புகளையும், தேங்க விடாமல் எடப்பாடி பழனிசாமி துரிதமாக கையாண்டு வருகிறார். உடனுக்குடன் கையெழுத்து போட்டு கோப்புகளை ஒரு கட்டத்தில் இருந்து, இன்னொரு கட்டத்துக்கு அனுப்பி வைக்கிறார். இதனால் திட்டங்களும் துரித கதியில் நடந்து, இறுதி கட்டத்தை எட்டுகின்றன. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 20 ஆயிரத்து 500-க்கு அதிகமான கோப்புகளில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டுள்ளார்.

உடனுக்குடன் முடிவு

அரசின் முடிவுகள் உடனுக்குடன் எடுக்கப்பட்டதால், நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் இருந்த பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. தொழில்துறையில் அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டதால், வேலைவாய்ப்புகளும் கணிசமாக அதிகரித்தன. காவிரி வேளாண் மண்டலங்கள் பாதுகாக்கப்பட்ட மண்டலங்களாக அறிவிக்கப்பட்டன. விவசாயிகள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதோடு, அவர்களுடைய கோரிக்கைகள், குறைகளுக்கு நிவர்த்தி காண உடனடியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

குடிமராமத்து திட்டம் மூலம் தமிழகம் முழுவதும் பெரும்பாலான நீர் நிலைகள் சீரமைக்கப்பட்டன. குளம், குட்டைகள், கால்வாய்கள் தூர்வாரி சீரமைக்கப்பட்டன. இதேபோல தடுப்பணைகள் கட்டி, தண்ணீரை தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டன. இதனால் நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக உயர்ந்தது.

வேலைவாய்ப்பு

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு இடங்களில் புதிதாக பாலங்கள் கட்டப்பட்டன. ஏற்கனவே கட்டுமான பணிகள் தொடங்கி, நீண்ட நாட்களாக நடந்து வந்த பாலம் அமைக்கும் பணிகளும் விரைவாக முடிக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் ஏராளமான சாலைகள் புதுப்பிக்கப்பட்டதோடு, புதிய சாலைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. ஆஸ்பத்திரி, பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டதோடு, அரசின் நிர்வாக வசதிக்காக பல்வேறு துறைகளுக்கு புதிய கட்டிடங்களும் வேகமாக கட்டி எழுப்பப்பட்டன.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் போட்டித் தேர்வு நடத்தி 18 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. இதேபோல தனியார் நிறுவனங்களோடு போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. சிறு தொழில்களும் ஊக்குவிக்கப்படுகின்றன.

கட்டுக்குள் கொரோனா

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களின் நலன் கருதி, மருத்துவ கல்லூரிகளில் அவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சாதாரண, நடுத்தர வகுப்பை சேர்ந்த மாணவ-மாணவிகளின் மருத்துவ கனவு நிறைவேறியுள்ளது.

கொரோனாவை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழக அரசின் நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது. இதற்கு மத்திய அரசிடம் இருந்து மட்டுமின்றி, சர்வதேச அளவில் இருந்தும் தமிழக அரசுக்கு பாராட்டு குவிந்தது.

மோடி பாராட்டு

சட்டம்-ஒழுங்கு, சுகாதாரம், உள்ளாட்சி, அரசு திட்ட செயலாக்கம் என அனைத்திலும் தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதாக மத்திய அரசு பாராட்டியது. மருத்துவ சிகிச்சை உடனுக்குடன் கிடைக்கும் வகையில் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. ரூ.12 ஆயிரத்து 110 கோடி அளவிலான விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.

அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துதல், சிறந்த நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி, எடப்பாடி பழனிசாமியை பாராட்டியுள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசின் சாதனைகள் 'வெற்றி நடைபோடும் தமிழகம்' என்ற பெயரில் மக்களிடம் எடுத்துச் சொல்லப்பட்டு வருகிறது. இது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com