உயர் கல்வியில் சிறந்து விளங்கும் தமிழகத்தின் கல்வி கொள்கையை நாடு முழுவதும் பின்பற்ற செய்ய வேண்டும்

உயர் கல்வியில் சிறந்து விளங்கும் தமிழகத்தின் கல்விக் கொள்கையை நாடு முழுவதும் பின்பற்றச் செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் கோரிக்கை விடுத்தார்.
உயர் கல்வியில் சிறந்து விளங்கும் தமிழகத்தின் கல்வி கொள்கையை நாடு முழுவதும் பின்பற்ற செய்ய வேண்டும்
Published on

சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று உயர் கல்வித் துறை மற்றும் பள்ளி கல்வித் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் முகமது ஷாநவாஸ் (நாகப்பட்டினம் தொகுதி) பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

துணை வேந்தர்கள் நியமனம்

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலாவது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை சாத்தியப்படாதா? என்று எதிர்பார்த்திருக்கும்போது, 2019-ம் ஆண்டே அதை சாத்தியப்படுத்தும் முயற்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டார்.

பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டும். மேலும், துணை வேந்தர்களை நியமிப்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும். இந்தியாவில் உயர் கல்வி படிப்போர் எண்ணிக்கை 27.1 சதவீதமாக இருக்கும் நிலையில், தமிழகத்தில் 51.4 சதவீதமாக இருக்கிறது. ஆனாலும், மத்திய அரசு தரும் கல்விக்கொள்கையைத்தான் நாம் பின்பற்ற வேண்டுமாம். உயர் கல்வியில் 51.4 சதவீதம் உள்ள நமது கல்விக்கொள்கையை அவர்கள் (மத்திய அரசு) நாடு முழுவதும் பின்பற்றச் செய்ய வேண்டும்.

தொண்டு நிறுவனங்கள் கண்காணிப்பு

எனவே, மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்வி கொள்கையை நாம் நிராகரிக்க வேண்டும். பல்கலைக்கழக பாடத்திட்டங்களில் சமூகநீதிக்கு எதிரான கருத்துக்கள் புகுத்தப்படுகின்றன. பள்ளிகளுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனங்களையும் கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, பாடத்திட்டத்தில் பல்வேறு தவறான கருத்துக்கள், திராவிட இயக்கத்துக்கு எதிரான கொள்கைகள் அனுமதிக்கப்பட்டு இருந்தன. திறந்தநிலைப் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து இப்போது அது நீக்கப்பட்டு உள்ளது" என்றார்.

அதன்பிறகு எழுந்து பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொண்டு நிறுவனங்கள், பள்ளிக்கூடங்களில் ஆய்வுக்கூடங்களை அமைத்து கொடுத்துள்ளன. அந்த அளவில் தான் அந்த நிறுவனங்கள் பயன்படுத்தப்படும். மற்றபடி, அவர்களின் கருத்துகள் கல்வியில் நுழையவிட மாட்டோம். அப்படி இருந்தால் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com