

புதுடெல்லி,
தமிழகத்தில் காலியாக 7 சட்டமன்ற தொகுதிகளில் இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அக்டோபர் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், விராலிமலை , பெருந்துறை, கரூர் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் நடத்துவதில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் இந்த தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை.
செப்டம்பர் 9 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.
வேட்பு மனு தாக்கல் நிறைவு: செப்டம்பர் 16
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை: செப்டம்பர் 17
வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாள்: செப்டம்பர் 19
வாக்குப்பதிவு: அக்டோபர் 6
வாக்கு எண்ணிக்கை; அக்டோபர் 9
அதி.மு.க. சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்யபாமா (தாராபுரம்) இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததால் தொகுதிகள் காலியானது. இந்த இரண்டு தொகுதிகளிலும் தவெக சார்பில் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்யபாமா (தாராபுரம்) வேட்பாளர்களாக நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் த.வெ.க. அரசு அமைந்து 3 மாதங்களே கடந்துள்ள நிலையில், கூட்டணியில் உள்ள கட்சிகள் பல்வேறு வகையில் குடைச்சல் கொடுக்க தொடங்கியிருக்கின்றன. அதாவது, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, தலைமைச் செயலாளருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியது. விடுதலை சிறுத்தைகள் கட்சியோ, அரசின் கொள்கை முடிவுகளில், தங்களுடைய கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க நெருக்கடி கொடுத்து வருகிறது.தற்போது, காங்கிரஸ் கட்சியும், ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காவிட்டால் அமைச்சரவையில் இருந்து வெளியேறுவோம் என்றும் மிரட்டி வருகிறது. கூட்டணி கட்சிகள் இவ்வாறு நெருக்கடி கொடுத்து வருவது த.வெ.க. அரசுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, எதிர்க்கட்சிகளான தி.மு.க.. அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள், த.வெ.க. அரசு எப்போது கவிழும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு த.வெ.க. அரசை கவலையடைய செய்துள்ளது. ஆட்சியில் தொடர வேண்டும் என்றால், தமிழகத்தில் காலியாக உள்ள 7 தொகுதிகள் இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் த.வெ.க. அரசுக்கு ஏற்பட்டுள்ளது. கடைசியாக கரூர் தொகுதி காலியானதாக கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி அறிவிக்கப்பட்டது. அதிலிருந்து 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்ற விதிமுறை இருந்தாலும், திருச்சி கிழக்கு. பெருந்துறை, விராலிமலை. கரூர், அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள் மீது தேர்தல் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால், குறிப்பிட்ட காலத்திற்குள் இடைத்தேர்தல் நடைபெறாது என தெரியவந்துள்ளது.
மேற்கண்ட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான தடை செப்டம்பர் 8-ந் தேதி வரை நீட்டிக்கபட்டுள்ளது. மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவதில் சிக்கல் இல்லை என்பதால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்று செல்வாக்கை காட்ட வேண்டிய கட்டாயத்தில் தவெக உள்ளது. அதேநேரத்தில் தவெகவை வீழ்த்த திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருப்பதால், அந்த இரண்டு தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.