மாஞ்சோலை மக்களின் வாக்குரிமையை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

வாக்களிக்கும் உரிமை என்பது இந்திய குடிமக்களின் சட்டபூர்வமான உரிமையாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி திருநெல்வேலி மாவட்ட செயலாளர் கே.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
மாஞ்சோலை மக்களின் வாக்குரிமையை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
Published on

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் கே.ஶ்ரீராம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டப் பகுதியில் மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி ஆகிய எஸ்டேட் பகுதியில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது 1,050 வாக்காளர்கள் வாக்களித்து உள்ளனர்.

சமீபத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் போது, தற்போது அங்கு குடியிருக்கும் 750க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் எஸ்ஐஆர் படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்துள்ளனர். ஆனால் வரைவு வாக்காளர் பட்டியலில் 78 பெயர்களைத் தவிர இதர வாக்காளர்கள் பெயர் இடம் பெறவில்லை.

இதுகுறித்து மாஞ்சோலை மக்கள் முறையீடு செய்த பிறகு, 635 வாக்காளர்கள் படிவம் 6 பூர்த்தி செய்து வாக்குச் சாவடி அலுவலர்களிடம் சமர்பித்து உள்ளனர். ஆனால் தற்போது வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 635 வாக்காளர்களது பெயர் இடம் பெறவில்லை. அவர்களுக்கு வேறு எங்கும் வாக்குகள் இல்லை. அவர்களிடம் மாஞ்சோலை பகுதியில் குடியிருக்கும் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை போன்ற சான்றுகள் இருந்த போதிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இது அரசியலமைப்பு சட்டம் பிரிவு 326 வழங்கி உள்ள வாக்களிக்கும் உரிமைக்கு எதிரானது.

அங்கு உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் செயல்படும் மக்கள் பிரதிநிதிகளின் வாக்குரிமையும் பறிக்கப்பட்டுள்ளது. வாக்களிக்கும் உரிமை என்பது இந்திய குடிமக்களின் சட்டபூர்வமான உரிமையாகும். எனவே ஜனநாயக விரோதமான முறையில் மாஞ்சோலை பகுதி மக்களின் நீக்கம் செய்யப்பட்ட வாக்குரிமையை ரத்து செய்து, அனைவரும் வாக்களிக்கும் வகையில் வாக்காளர் பட்டியலில் அவர்களது பெயர் சேர்க்கப்பட்டு, சட்டமன்றத் தேர்தலின் போது அங்கு செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ள மூன்று வாக்குச் சாவடிகளில் வாக்கு அளிக்கும் ஏற்பாட்டை உறுதி செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருநெல்வேலி மாவட்டக்குழு மாவட்ட நிர்வாகத்தையும், தேர்தல் ஆணையத்தையும் வலியுறுத்துகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com