மாமல்லபுரம் கலங்கரை விளக்கத்துக்கு தேவையான மின்சாரம், சூரிய ஔி மூலம் கிடைக்க ஏற்பாடு

மாமல்லபுரம் கலங்கரை விளக்கத்துக்கு தேவையான மின்சாரம் சூரிய ஔி மூலம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாமல்லபுரம் கலங்கரை விளக்கத்துக்கு தேவையான மின்சாரம், சூரிய ஔி மூலம் கிடைக்க ஏற்பாடு
Published on

கலங்கரை விளக்கம்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் நகரின் மையப்பகுதியில் உள்ள நீளமான பாறை மீது இயற்கை எழில் கொஞ்ச அமைந்துள்ளது, 120 ஆண்டுகள் பழமை வாய்ந்த கலங்கரை விளக்கம். இது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அதாவது, 1887-ல் கட்டப்பட்டது. வங்ககடலில் பயணிக்கும் கப்பல் மற்றும் படகுகள் இந்த பகுதியை அறிந்து விலகி செல்லவும், மாலுமிகளுக்கு அடையாளம் காட்டவும் இந்த கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது.

மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இந்த கலங்கரை விளக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த கலங்கரை விளக்கத்தில் தொடக்கத்தில் மண்ணெண்ணெய் மூலம் விளக்கு எரிக்கப்பட்டது.

எல்.இ.டி. விளக்கு

கடந்த 1940-ம் ஆண்டு மின்னணு கருவிகள் பொருத்தப்பட்டு, நவீனதொழில் நுட்பத்தில் எல்.இ.டி. விளக்கு மூலம் ஔி பாய்ச்சும் வகையில் இந்த கலங்கரை விளக்கம் இயங்கி வருகிறது. இந்த கலங்கரை விளக்கம் மீது ஏறி மாமல்லபுரம் நகரின் முழு அழகையும் கண்டு ரசிக்கலாம்.

இதன் உச்சியில் உள்ள சுழலும் விளக்கில் 250 வாட்ஸ் திறன் கொண்ட எல்.இ.டி. விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு தேவையான மின்சாரம் இதுவரை மாமல்லபுரம் மின்வாரிய இணைப்பின் மூலம் பெறப்பட்டு பயன்படுத்தபட்டு வந்தது. மழை மற்றும் பேரிடர் காலங்களில் ஏற்படும் மின்தடையாலும், மின்வாரிய மாதாந்திர பழுது காரணமாக செய்யப்படும் ஒரு நாள் மின்தடையாலும் கலங்கரை விளக்க ஔி பாய்ச்சும் விளக்குக்கு தேவையான மின்சாரம் கிடைக்க இதுவரை சிக்கல் ஏற்பட்டு வந்தது.

சூரிய ஒளி மூலம் மின்சாரம்

இதையடுத்து கலங்கரை விளக்கங்கள் துறை நிரந்தர மின்தேவையை கருத்தில் கொண்டு இதற்கு நிரந்தர தீர்வாக கலங்கரை விளக்க அலுவலகத்தில் சூரிய ஔி மூலம் மின்சாரம் கிடைக்கும் வகையிலும், அதனை சேமிக்கும் வகையிலும், கலங்கரை விளக்க அலுவலகத்தின் மேல் தளத்தில் சோலார் பேனல் பொருத்தி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த சோலார் பேனல் மூலம் கலங்கரை விளக்கத்தின் பயன்பாட்டுற்கும் விட கூடுதலான மின்சாரம் கிடைப்பதாகவும், தினமும் பயன்பாட்டிற்கு போக மீதம் கிடைக்கும் கூடுதல் மின்சாரத்தை தாங்கள் சேமித்து வைத்துள்ளதாகவும், மழைக்காலம், பருவநிலை மாற்றம் ஏற்படும் காலம் மற்றும் வெயில் இல்லாத காலங்களில் இந்த சேமிப்பில் உள்ள கூடுதல் மின்சாரத்தை பயன்படுத்தி கொள்வோம் என்று கலங்கரை விளக்ககத்தின் பராமரிப்பு அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com