

சென்னை,
சட்டசபையில் கேள்வி நேரத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் (திருமங்கலம்), மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் ஒரு பகுதி கடந்த காலத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்டது. அதற்காக பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அப்போதைய முதல்-அமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்தார். நாமக்கல் மாவட்டத்தில்தான் அதற்குரிய கல் இருக்கிறது என்று கண்டறியப்பட்டது.
பல தடைகளை எல்லாம் தாண்டி, அந்தக் கல்லை அங்கிருந்து எடுக்கலாம் என்ற நிலை உருவானது. தற்போது நீங்கள் அந்த பணிகளை முடுக்கிவிட்டிருப்பதாக நாங்கள் அறிகிறோம். எப்போது அந்தப் பணிகள் முடிவடையும்?, அதற்கு காலம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதா? என்று துணைக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதில் அளித்து கூறியதாவது:-
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் 2018-ம் ஆண்டு தீ விபத்து ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து தீ விபத்து பாதிப்பை ஆய்வு செய்ய உத்தரவிட்டபிறகு, அதற்கென ஒரு குழுவை அப்போதைய ஆட்சியாளர்கள் அமைத்தார்கள். 2018-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 3 ஆண்டுகள் அவர்கள்தான் ஆட்சிப் பொறுப்பில் இருந்தார்கள். ஒருமுறைகூட அந்தக் குழு மீண்டும் கூட்டப்படவில்லை.
ரூ.19 கோடி
அங்கே தீ விபத்து ஏற்பட்டதற்கு பிறகு, இதுவரையில் பணிகள் துவங்கப்படாமல் இருந்த வீரராகவன் வாயிலை கொண்ட அந்த வாசலை நிதி அமைச்சர், அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் மூர்த்தியோடு சேர்ந்து நேரில் சென்று பார்வையிட்டோம்.
உறுப்பினர் சொன்னது போல், அரசு ஒன்றும் முழுமையாக நிதியை ஒதுக்கவில்லை. தனியார் பங்களிப்போடு அரசு நிதியும் சேர்த்துதான் அந்த திருப்பணியை எடுத்திருக்கிறோம். ரூ.19 கோடி செலவில் அதற்குண்டான கற்களை அளவிடும் பணி, தயாரிக்கும் பணி நாமக்கலில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்தக் கல்லை நாமக்கல்லில் இருந்து இங்கே கொண்டுவரும்போது, சேதாரம் ஏற்பட்டுவிடும் என்பதால், கோவில் வளாகத்திலேயே மண்ணை நிரப்பி அதற்கென்று ஓரிடத்தை ஒதுக்கச் சொல்லியிருக்கிறார்கள். அந்தப் பணி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஓராண்டுக்குள்
நீங்கள் விட்டுவிட்ட பணி என்றாலும், அது ஆன்மிகம் தொடர்புடையது. பக்தகோடிகளுக்கு மன நிறைவு வேண்டும் என்பதற்காகவே, அந்த பணியை விரைவாக முடிப்பதற்காக முதல்-அமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். இன்னும் ஓராண்டுக்குள் அந்தப் பணி நிறைவு பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.