‘திரை உலகின் ஈடிலா பேரொளி அணைந்துவிட்டது’: பாரதிராஜா மறைவுக்கு வைகோ இரங்கல்

16 வயதினிலே என்ற திரைப்படம் வாலிப நெஞ்சங்களை காதல் எனும் மயிலிறகால் வருடியது. அத்திரைப்படம் முடியும்போது கண்கள் கோர்த்த நீருடன் கனத்துப் போன இதயத்துடன் கொட்டகையை விட்டு வெளியேறினோம் என்று வைகோ கூறினார்.
வைகோ இரங்கல்
Published on

சென்னை,

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

திரை உலகின் ஈடிலா பேரொளி அணைந்துவிட்டது. ஆனால், அந்த ஒளி வெள்ளத்தின் பிரகாசம் இருளையும், இரவுகளையும் கடந்து இன்னும் பன்னூறு ஆண்டுகளுக்கு ஜொலித்துக் கொண்டே இருக்கும்.

கலை உலகின் முடிசூடா வேந்தன்

தென்பாண்டி மண்டலத்தின் உயிர் நாதமான கிராமங்களை வெட்டரிவாளும், வேலும் தாங்கிய வீர தமிழ்க் குலத்தின் மகத்தான மாண்பினை தலை கவிழாத தன்மானத்தை, ஓடும் சிற்றாறுகளின் சல சலப்பை பண்டுதொட்டு திகழ்ந்த தமிழனின் கலாச்சாரத்தை இமயத்தின் உச்சியில் நட்டு வைத்த கலை உலகின் முடிசூடா வேந்தன், நான் உயிராக நேசித்த பாரதிராஜா எனும் உன்னதப் படைப்பாளி ஐயோ போய்விட்டாரே! அந்த இடத்தை நிரப்புவதற்கு எக்காலத்திலும் எவராலும் இயலாது.

16 வயதினிலே என்ற திரைப்படம் வாலிப நெஞ்சங்களை காதல் எனும் மயிலிறகால் வருடியது. அத்திரைப்படம் முடியும்போது கண்கள் கோர்த்த நீருடன் கனத்துப்போன இதயத்துடன் கொட்டகையை விட்டு வெளியேறினோம்.

கிழக்கே போகும் ரயிலில், காதல் உலகத்தை வலம் வந்தோம். புதிய வார்ப்புக்களில் நெஞ்சம் சிலிர்த்தோம். மண் வாசனையில் அரிவாளின் கூர்மையைத் தடவிப் பார்த்தோம். சிகப்பு ரோஜாக்களில் மர்ம பட மன்னன் ஹிட்ச்காக்கின் ஆளுமையை மீறல் கண்டோம்.

உலகிலேயே ஈடிலா நடிப்புலகின் விரிவானம் சிவாஜி கணேசனை மறு உயிர்ப்பாக முதல் மரியாதையாக சந்தித்தோம். பட்டிக்காடுகள் வெள்ளித் திரையில் பட்டணப் பிரவேசம் செய்வதைக் கண்டு பூரித்தோம். கடலோர கவிதைகளின் காதல் உணர்வில் உருகிப் போனோம். புதுமைப் பெண் படைப்பில் தமிழ்ப் பெண் புதுமை கண்ணகியாக சீறி எழுந்ததைக் கண்டு வியந்தோம்.

என் உயிரினும் இனிய தமிழ் மக்களே

தமிழ்த் திரை உலகத்தின் போக்கை தலைகீழாகப் புரட்டிப் போட்ட புதிய கலை உலகை தரிசித்தோம். கைரேகை சட்டத்தால் வெள்ளையர் ஆட்சியில் கொடுமை சங்கிலிகளால் பூட்டப்பட்ட பிரமலைக் கள்ளர் சமூகம் கலை உலக பிரம்மாவை தமிழனுக்குத் தந்தது. என் உயிரினும் இனிய தமிழ் மக்களே! என்ற காந்தக் குரல் ஓசையை பாரதிராஜாவின் திரைப்படத்தின் முதல் நிமிடத்திலேயே செவிகளில் கேட்டு சிலிர்ப்படைந்தோம்!

அக்காவிய நாயகன் மேனியால் மறைந்தாலும், தன் படைப்புக்களால் காலனை வென்றுவிட்டான்; மரணத்தையும் சாய்த்துவிட்டான்! எனினும் நம்மை விட்டு அவர் பிரிந்தார் என நினைக்கையில் கண்கள் குளமாகின்றன! நெஞ்சம் துடிக்கிறது. காவிய நாயகனே! கலை உலகத்தின் கோகினூர் வைரமே! உன்னை எண்ணி இதயம் வெம்முகிறது, நெஞ்சம் கலங்குகிறது. எந்த மலர்களால் நீ உன் காவியத் தலைவன் தலைவியை போற்றி எங்களை பூரிக்கச் செய்தாயோ அதே பூக்களை உன் மேனியில் தூவி புகழ் வணக்கம் செலுத்துகிறோம்!

இரங்கல்

என் பாரதிராஜாவே, கலை உலகின் உயிர்க் காவியமே உன் கீர்த்தி, காலங்களை வென்று ஒளிர்ந்துகொண்டே இருக்கும்! உன் புகழை உச்சரித்தால் எங்கள் உதடுகள் உயிர்க்கின்றன! நின் பெயர் வாழிய! காலத்தை வென்று வாழிய! உன் பரம ரசிகனின் நெஞ்சம் வடித்த இரங்கல் வணக்கம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com