கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு உரிய துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டும் - சீமான்

தி.மு.க. அரசு வேடிக்கைப் பார்ப்பதே அப்பாவித் தொழிலாளர்கள் உயிரிழக்க காரணம் என்று சீமான் கூறியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மல்லாங்கோட்டை கிராமத்தில் முறைகேடாக இயங்கி வந்த தனியார் கல்குவாரியில் பாறைகளை உடைக்கும்போது நிகழ்ந்த விபத்தில் சிக்கி 5 தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

விதிகளை மீறி தமிழ்நாடு முழுவதும் அனுமதிக்கப்பட்ட அளவினை விடவும் அதிகமாக பாறைகளை வெட்டி கனிம வளங்கள் கடத்தப்படுவதையும், அது குறித்து புகாரளிக்கும் சமூக ஆர்வலர்கள் கொடூரமாக கொல்லப்படுவதையும் தடுக்கத் தவறி தி.மு.க. அரசு வேடிக்கைப் பார்ப்பதே இதுபோன்ற விபத்துகள் நடைபெற்று அப்பாவித் தொழிலாளர்கள் உயிரிழக்க அடிப்படை காரணமாகும்.

கனிமவளக் கடத்தல்காரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத தி.மு.க. அரசு, புகாரளிப்பவர்கள் மீது பொய் வழக்கு புனைந்து சிறையலடைப்பது மற்றுமொரு பெருங்கொடுமையாகும். இயற்கையின் எல்லா வளங்களையும் சுரண்டி விற்று அழித்து முடித்துவிட்டு வருங்காலத் தலைமுறைக்கு எதை வைத்துவிட்டு போகப்போகிறோம் என்ற கேள்விக்கு நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் என்ன பதில் கூறப்போகிறார்கள்?

சிங்கம்புணரி கல்குவாரி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரில் பங்கெடுக்கின்றேன். தமிழ்நாடு அரசு உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன். விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு உயர் மருத்துவம் அளிக்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதிசெய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com