கலப்பையில் தவறி விழுந்து விவசாயி சாவு

டிராக்டர் ஓட்டி சென்றபோது, கலப்பையில் தவறி விழுந்து விவசாயி பரிதாபமாக இறந்தார்.
கலப்பையில் தவறி விழுந்து விவசாயி சாவு
Published on

டிராக்டர் ஓட்டிய விவசாயி

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள ஆர்.பி.பள்ளப்பட்டியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 28). விவசாயி. நேற்று இவர், அதே பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் டிராக்டர் மூலம் உழவு பணியில் ஈடுபட்டார்.

மாலையில் அவர் அங்கிருந்து டிராக்டரில் காளகவுண்டன்பட்டியில் உள்ள தனது தோட்டத்திற்கு வந்து கொண்டிருந்தார். அழகாபுரி - கோவிலூர் சாலையில் காளகவுண்டன்பட்டி அருகே டிராக்டர் சென்றது.

அப்போது ரஞ்சித்குமார் டிராக்டரை ஓட்டிக்கொண்டே பின்பக்கம் திரும்பி கலப்பையில் சிக்கியிருந்த மண்ணை குச்சியால் குத்தி சுத்தப்படுத்திக்கொண்டு வந்தார். இதில் எதிர்பாராதவிதமாக ரஞ்சித்குமார் ஓடும் டிராக்டரின் பின்பக்கம் இருந்த கலப்பையின் மேல் தவறி விழுந்தார்.

படுகாயம் அடைந்த அவர் கலப்பையில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ரஞ்சித்குமார் இறந்த நிலையில் டிராக்டர் மட்டும் சாலையில் சென்று கொண்டிருந்தது.

கலப்பையில் சிக்கி பலி

அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் ரஞ்சித்குமாரின் தந்தை பூமிராஜ் வந்தார். டிரைவர் இல்லாமல் டிராக்டர் மட்டும் வருவதை கண்டு அவர் பதற்றம் அடைந்தார். உடனடியாக அவர் ஓடும் டிராக்டரில் ஏறி நிறுத்தினார்.

இதையடுத்து பின்பக்கம் பார்த்தபோது ரஞ்சித்குமார் கலப்பையில் சிக்கி இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள் அனைவரும் அங்கு திரண்டு கதறி அழுதனர்.

இதுதொடர்பாக எரியோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் ரஞ்சித்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலாயுதம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com