கலெக்டரிடம் அரசு ஆவணங்களை ஒப்படைக்க வந்த விவசாயிகளால் பரபரப்பு

கலெக்டரிடம் அரசு ஆவணங்களை ஒப்படைக்க வந்த விவசாயிகளால் பரபரப்பு ஏற்பட்டது.
கலெக்டரிடம் அரசு ஆவணங்களை ஒப்படைக்க வந்த விவசாயிகளால் பரபரப்பு
Published on

குறை தீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

அப்போது வேப்பந்தட்டை தாலுகா, உடும்பியத்தை சேர்ந்த விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை, ரேஷன் கார்டு (குடும்ப அட்டை), வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களை கலெக்டரிடம் ஒப்படைக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அனைத்து சலுகைகளும் நிறுத்தி வைப்பு

அப்போது அவர்கள் கூறுகையில், கடந்த 2012-ம் ஆண்டு முதல் எங்களுக்கு கிராம நிர்வாக அலுவலரால் வழங்கப்படும் பட்டா, சிட்டா, அடங்கல், சொத்து வரி மற்றும் அரசின் அனைத்து சலுகைகளும், பத்திரப்பதிவுகளும், அரசின் எவ்வித ஆணையும் இன்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டருக்கு கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் 14-ந்தேதி அளிக்கப்பட்ட மனு தொடர்பாக உடும்பியம் கிராம நிர்வாக அலுவலர், வெண்கலம் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரடி விசாரணை செய்து அதன் அறிக்கையை தாசில்தார் பார்வைக்கு அனுப்பி வைத்தனர்.

தாசில்தார், பாதிக்கப்பட்ட மக்களிடம் அழைப்பாணை மூலம் நேரடி விசாரணை முடித்து, அதன் அறிக்கையை பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியரின் பார்வைக்கு அனுப்பி வைத்தார். வருவாய் கோட்டாட்சியரும், அந்த அறிக்கை தொடர்பாக சென்னை ஆவண காப்பகம் மற்றும் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆவண காப்பகம் மற்றும் பெரம்பலூர் ஆவண காப்பகத்தில் விசாரணை மனு அளித்து அதற்கான பதிலையும் பெற்றுக்கொண்டார். இந்த மனு தொடர்பாக வருவாய் கோட்டாட்சியரை கடிதம் வாயிலாக கேட்டபோது மனுவானது மீண்டும் தாசில்தாரிடம் விசாரணைக்காக அனுப்பப்பட்டுள்ளது என்று கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி கடிதம் வாயிலாக தெரிவித்தார்.

கலெக்டர் வாங்க மறுப்பு

9 மாத காலம் ஆகியும் எங்களுக்கான எந்தவித பதிலும் மற்றும் அரசு வழங்கும் சலுகைகளும், உரிமைகளும் கிடைக்க பெறவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவரும் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளோம். எனவே எங்கள் நிலத்திற்கு அரசு வழங்கக்கூடிய ஆவணங்கள் மற்றும் சலுகைகளும் நிறுத்தி வைக்கப்பட்ட காரணத்தினால் அரசு எங்களுக்கு முறையாக வழங்கியுள்ள ஆவணங்களான ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை கலெக்டரிடம் திரும்ப ஒப்படைக்கவுள்ளோம், என்றனர். பின்னர் அவர்களில் சிலா சென்று கலெக்டரை சந்தித்து இது தொடர்பாக மனு கொடுத்தனர். மேலும் அவர்கள் ஆவணங்களையும் கலெக்டரிடம் ஒப்படைக்க முயன்றனர். ஆனால் கலெக்டர் கற்பகம் ஆவணங்களை பெற மறுத்து விட்டு, மனுவினை மட்டும் பெற்றுக்கொண்டு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும், என்றா.

பதக்கங்களை பெற்ற மாற்றுத்திறனாளிகள்

கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 297 மனுக்கள் பெறப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில், மனு கொடுக்க வந்த பொதுமக்களுக்கு கலெக்டர் தேசிய கொடிகளை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார். கடந்த கூட்டத்தில் காதொலி கருவி வேண்டி மனு அளித்த மாற்றுத்திறனாளி ஒருவருக்கு இந்த கூட்டத்தில் காதொலி கருவியினை கலெக்டர் வழங்கினார்.

பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் பெற்றோர்களில் யாரேனும் ஒருவர் அல்லது இருவரையும் இழந்த 7 மாணவர்களுக்கு நிதி உதவி தொகையாக தலா ரூ.75 ஆயிரத்திற்கான பத்திரங்களை கலெக்டர் வழங்கினார். சென்னையில் சமீபத்தில் நடந்த அகில இந்திய அளவில் மாற்றத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் 10 தங்க பதக்கங்கள், 9 வெள்ளி பதக்கங்கள் 3 வெண்கல பதக்கங்கள் பெற்ற மாற்றுத்திறனாளிகளும், கபடி போட்டியில் முதலிடம் பிடித்து கோப்பையை பெற்ற, தமிழக அணிக்காக விளையாடிய பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 2 மாற்றுத்திறனாளிகளும் கலெக்டர் கற்பகத்தை சந்தித்து தாங்கள் பெற்ற பதக்கங்கள், கோப்பையை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com