“கட்சிக்காரங்க மேலதான் தப்பு” - தஞ்சாவூரில் விசிக போராட்டத்தின்போது நடந்த சம்பவம் குறித்து விவரித்த இளைஞர்

தஞ்சாவூரில் விசிகவினர் கடந்த 17-ம் தேதி மாநகராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
“கட்சிக்காரங்க மேலதான் தப்பு” - தஞ்சாவூரில் விசிக போராட்டத்தின்போது நடந்த சம்பவம் குறித்து விவரித்த இளைஞர்
Published on

தஞ்சாவூர்,

தஞ்சாவூரில் விசிக மறியல் போராட்டத்தின்போது நடந்த சம்பவம் குறித்து இளைஞர் ஆகாஷ் விவரித்துள்ளார்.

சாலை மறியல்

தஞ்சாவூரில் விசிகவினர் கடந்த 17-ம் தேதி மாநகராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த விளார் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (26), தான் வேலைக்குச் செல்ல வழிவிட வேண்டும் என்று கூறி விசிகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

காவலருடன் வாக்குவாதம்

அப்போது அங்கு வந்த சிறப்பு எஸ்ஐ அப்துல் ரஹீமுக்கும், ஆகாஷுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியநிலையில், ஆகாஷை எஸ்ஐ அப்துல் ரஹீம் கன்னத்தில் அறைந்தார். தொடர்ந்து ஆகாஷும் அவரை தாக்கினார். .

இதையடுத்து, ஆகாஷையும், அவருக்கு ஆதரவாக பேசிய திருக்கானூர்பட்டியைச் சேர்ந்த அய்யப்பன் என்பவரையும் போலீசார் காவல் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். பின்னர், அவர்கள் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். இதையடுத்து இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.

கட்சிக்காரங்க மேலதான் தப்பு

இந்நிலையில், தஞ்சாவூரில் விசிக மறியல் போராட்டத்தின்போது நடந்த சம்பவம் குறித்து ஆகாஷ் கூறியதாவது:

“அந்தக் கட்சி பற்றி எனக்கு எதுவும் தெரியாது. கட்சிக்காரங்க மேலதான் தப்பு. நான் முதலில் ரிக்வெஸ்ட் பண்ணி பேசினேன். ‘உங்க பிரச்சினை எனக்கு தெரியாது. என் பிரச்சினை உங்களுக்கு தெரியாது. நான் வேலை பார்த்தால்தான் எனக்கு சம்பளம்’ என்று சொன்னேன். ஆனால், கட்சிக்காரர்கள் என் மீது வழக்கு போடுவோம் என்று கூறினார்கள்.

போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இடம் என்று எவ்வளவோ சொன்னேன். என்னை அடிக்க வந்தார்கள். அப்போது காவலர்கள் வந்தனர். ‘என் மீது கை வைத்து பாருங்கள்’ என்றேன். அவர்கள் என்னை அடித்தார்கள்.

நான் யூனிபார்மில் இருந்த காவலரை அடித்தது தவறுதான். அதுவும் அவர் வயதில் பெரியவர். இதில் காவல்துறை மீது எந்த தவறும் இல்லை. அந்த நேரத்தில் அவர்களுக்கும் அது சிரமமாகத்தான் இருந்திருக்கும்.

‘எங்களை அடித்ததால்தான் இந்த பிரச்சினை இதோடு நின்றது. இதே கட்சிக்காரர்களை அடித்திருந்தால், பி.சி.ஆர். வழக்கு போட்டிருப்பார்கள்’ என்று காவலர்கள் சொன்னார்கள்.

நானும் பாதிக்கப்பட்டிருக்கிறேன்; காவல்துறையினரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை எதுவும் சொல்லாதீர்கள்” என்று தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com