காவிரி பிரச்சினையில் தமிழக விவசாயிகளுக்கு சாதகமான தீர்வு நிச்சயமாக கிடைக்கும் கவர்னர் பேட்டி

காவிரி பிரச்சினையில் தமிழக விவசாயிகளுக்கு சாதகமான தீர்வு நிச்சயமாக கிடைக்கும் என்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார்.
காவிரி பிரச்சினையில் தமிழக விவசாயிகளுக்கு சாதகமான தீர்வு நிச்சயமாக கிடைக்கும் கவர்னர் பேட்டி
Published on

சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நிருபர்களுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:-

காவிரி விவகாரத்தில் நான் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்று நீங்கள் கேட்கிறீர்கள். ஆனால் அது என்னுடைய மனதுக்கு மிகவும் நெருக்கமான விஷயம். கடந்த ஆண்டு அக்டோபர் 6-ந்தேதி கவர்னராக பொறுப்பேற்ற பிறகு, 12-ந்தேதி மாநில கவர்னர்களின் கூட்டம் டெல்லியில் நடந்தது. அதில் கலந்து கொண்டு நான் பேசும்போது, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தேன்.

டெல்டா பகுதியில் மக்கள் பிரச்சினைகளுடன் இருப்பதால் காவிரி விவகாரத்தை நான் பல முறை எடுத்துரைத்து இருக்கிறேன். மத்திய மந்திரி நிதின் கட்காரியிடமும் இன்று(நேற்று) நான் பேசினேன். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, காவிரி பிரச்சினையில் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாகவும், அதை தொடர்ந்து செய்து கொண்டு இருப்பதாகவும் அவர் பதில் அளித்தார்.

எனவே அதை நான் தொடர்ந்து கவனித்து கொண்டு இருக்கிறேன். இதுபற்றி தமிழக அரசிடம் தெரிவித்தீர்களா? என்று கேட்டால், எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

காவிரி பிரச்சினையை பொறுத்தவரையில், காவிரி மேலாண்மை வாரியமும், காவிரிநீர் ஒழுங்காற்று குழுவும் அமைக்கப்பட வேண்டும் என்று தான் நானும் வலியுறுத்தி இருக்கிறேன். காவிரி பிரச்சினையில் தமிழக விவசாயிகளுக்கு சாதகமான தீர்வு நிச்சயமாக கிடைக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கவர்னரின் பேட்டி முடிந்ததும், நிருபர்கள் பலர் அவருடன் நின்று செல்பி எடுத்துக்கொண்டனர். இந்த பேட்டியின் போது கவர்னரின் கூடுதல் தலைமை செயலாளர் ராஜகோபால், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பி.பி.செல்லதுரை, பதிவாளர் வி.சின்னையா ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com