புதுமைபெண் திட்டத்தை மாணவிகள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்

பெண்களின் முன்னேற்றத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள புதுமை பெண் திட்டத்தை மாணவிகள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் கூறினார்
புதுமைபெண் திட்டத்தை மாணவிகள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்
Published on

கள்ளக்குறிச்சி

புதுமைபெண் திட்டம்

கள்ளக்குறிச்சி ஏ.கே.டி.பள்ளி கூட்டரங்கில் மூவலூர் புதுமை பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த நிகழ்ச்சி காணொலி காட்சி மூலம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

இதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகத்தின் சாபில் புதுமை பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், வசந்தம்.கார்த்திகேயன், மணிக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைபெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி படித்து வரும் 358 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

பெண்களை ஊக்குவிக்க...

உயர்கல்வி படிக்க அதிக எண்ணிக்கையில் பெண்களை ஊக்குவிப்பதற்காக புதுமைபெண் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட டிப்ளோமோ, ஐ.டி.ஐ. படிப்புகளில் சேரும் 8 மற்றும் 9,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவிகள் 6-ம் வகுப்பு முதல் தமிழக அரசு பள்ளிகளில் படித்திருந்தால் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடையவர்கள். ஒருங்கிணைந்த முதுகலை பட்டம் படித்தால் முதல் 3 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.

தொலைதூர கல்வி மற்றும் அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள் மூலம் உயர்கல்வியை தொடரும் மாணவிகளுக்கு இத்திட்டம் பொருந்தாது. penkalvi.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

பெண்கள் முன்னேற்றத்துக்காக...

பெண்களின் முன்னேற்றத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள புதுமை பெண் திட்டத்தை மாணவிகள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஷ்வரிபெருமாள், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன், கள்ளக்குறிச்சி ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம் மற்றும் அனைத்து ஒன்றியக்குழு தலைவர்கள், அரசு அலுவலர்கள், கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com