போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமூக விரோதிகள் என்பதா? நடிகர் ரஜினிகாந்த் மீது ஓசூர் போலீசில் புகார்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமூக விரோதிகள் என்று கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர் ஒருவர் ஓசூர் போலீசில் புகார் செய்துள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமூக விரோதிகள் என்பதா? நடிகர் ரஜினிகாந்த் மீது ஓசூர் போலீசில் புகார்
Published on

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சென்னத்தூர் வ.உ.சி. நகரைச் சேர்ந்தவர் சிலம்பரசன். சமூக ஆர்வலர். இவர் ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடிக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அகிம்சை வழியில் போராடி உயிர் தியாகம் செய்து, போலீசாரின் துப்பாக்கி சூட்டிற்கு பலியான 13 பேர் பற்றி எதிர்மறையான கருத்துகளை தெரிவித்துள்ளார். போராட்டக்காரர்களுடன் சமூக விரோதிகள் ஊடுருவியதால் கலவரம் ஏற்பட்டது என்று கூறி, துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரும் சமூக விரோதிகள் என மறைமுகமாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பொய்யான கருத்தை மக்களிடம் பரப்பி உள்ளார்.

போராடினால் உயிர் பலி ஆகி விடும் என்பது போன்ற கருத்தை அவர் மக்களிடம் உருவாக்கி உள்ளார். ஒட்டு மொத்த தமிழக மக்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் தியாகங்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் அவர் பேசி இருக்கிறார். தொடர்ந்து போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு சுடுகாடு ஆகி விடும் என்றும் அவர் கூறி இருக்கிறார். மக்களின் போராட்டங்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

புகார் மனுவை பெற்றுக்கொண்ட ஓசூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஹேமாவதி, புகார் மனுவை பெற்றுக்கொண்டதற்கான மனு ஏற்பு ரசீதை (சி.எஸ்.ஆர்.) அவரிடம் வழங்கினார். இந்த புகார் மனு தொடர்பாக அரசு வக்கீலுடன் ஆலோசனை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே ரஜினிகாந்த் மீது புகார் கொடுத்துள்ள சிலம்பரசன் கூறியதாவது:- தூத்துக்குடியில் போராட்டம் நடத்தியவர்களை சமூக விரோதிகள் என்று கூறிய, நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தேன். பின்னர் சென்னை ஐகோர்ட்டிலும் மனு தாக்கல் செய்தேன். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கீழ் நீதிமன்றம் மூலமாக மனு மீது தீர்வு ஏற்படுத்தி கொள்ள உத்தரவிட்டுள்ளனர்.

தற்போது முதல் கட்டமாக எனது புகார் மனு ஏற்கப்பட்டு, அதற்கான சான்று வழங்கப்பட்டுள்ளது. விரைவில் போலீசார் ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்வார்கள் என நம்புகிறேன். இல்லாவிட்டால் சட்டப்பூர்வமாக கோர்ட்டு மூலமாக மேல் நடவடிக்கை எடுக்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com