மலை கிராமத்திற்கு முதல் முறையாக வந்த அரசு பேருந்து - ஆரத்தி எடுத்து வரவேற்ற மக்கள்

கொட்டகுடி கிராமத்திற்கு தமிழக அரசு போக்குவரத்து துறை சார்பாக பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
மலை கிராமத்திற்கு முதல் முறையாக வந்த அரசு பேருந்து - ஆரத்தி எடுத்து வரவேற்ற மக்கள்
Published on

தேனி,

தேனி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற குரங்கணி அருவிக்கு அருகில், போடிநாயக்கனூரில் இருந்து சுமார் 16 கி.மீ. தூரத்தில் கொட்டக்குடி மலை கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

அங்குள்ள குழந்தைகள் போடிநாயக்கனூரில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு சென்று கல்வி பயின்று வருகின்றனர். கொட்டகுடியில் இருந்து பேருந்து போக்குவரத்து வசதி இல்லாத நிலையில், பள்ளி மாணவர்கள் தினமும் 2 முதல் 3 கி.மீ. தூரம் நடந்து சென்று, குரங்கணி செல்லும் பேருந்தில் ஏறி பள்ளிகளுக்கு சென்று வந்தனர்.

சுமார் 56 ஆண்டுகளாக கொட்டகுடி மலை கிராமத்திற்கு பேருந்து வசதி அல்லது மினி பேருந்து வசதி ஏற்படுத்தித் தரக்கோரி பலமுறை போராட்டங்கள் நடத்தியும், தேர்தல் புறக்கணிப்பு செய்தும் இதுவரை யாரும் கண்டு கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்து வந்தனர். அந்த கிராமத்திற்கு சுமார் 26 ஆண்டுகளுக்கு முன்பு சாலை வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. ஆனாலும் பேருந்து வசதி ஏற்படுத்தி தரப்படவில்லை.

இந்த நிலையில், கொட்டக்குடி மலை கிராமத்திற்கு 56 ஆண்டுகளில் முதல் முறையாக தற்போது அரசு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 5.30 மணிக்கு கொட்டகுடி குரங்கணி பகுதிகளில் தமிழக அரசு போக்குவரத்து துறை சார்பாக பேருந்து போக்குவரத்து தொடங்கியது. தங்கள் கிராமத்திற்கு முதல் முறையாக வந்த பேருந்தை அங்குள்ள மக்கள் ஆரத்தி எடுத்தும், தேங்காய் உடைத்தும், இனிப்புகளை வழங்கியும் உற்சாகமாக வரவேற்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com