

சென்னை, தமிழகத்தில் டெல்டா பகுதிக்கு காவிரி நீர் கிடைப்பதற்கு ஆண்டுக்கணக்கில் தமிழக மக்களும், அரசியல் கட்சிகளும் போராடி வந்தன. தமிழக அரசின் சட்டப்போராட்டத்துக்கு வெற்றி கிடைத்தது.
அதன்படி, தமிழக அரசு நீண்ட நாட்களாக கோரிவந்த காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இரண்டு அமைப்புகளுக்கும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தின் தலைவராக மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் மசூத் ஹுசேன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் உறுப்பினர்களாக மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் நவீன் குமார், மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை கமிஷனர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் சில மத்திய அரசு அதிகாரிகள் பகுதி நேர உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவின் நீர்வளத்துறை நிர்வாக செயலாளர் (பொறுப்பு), கேரள நீர்வளத்துறை செயலாளர் டிங்கு பிஸ்வால், புதுச்சேரி பொதுப்பணித்துறை செயலாளர் மற்றும் மேம்பாட்டு கமிஷனர் அன்பரசு, தமிழக பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் ஆகியோர் பகுதிநேர உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் கோயல், காவிரி மேலாண்மை ஆணையத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆணையத்தின் தலைமையகம் டெல்லியில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தலைவர், உறுப்பினர்கள், பகுதி நேர உறுப்பினர்கள் 9 பேர் நியமிக் கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஆணையத்தின் முதல் கூட்டம் வரும் ஜூலை 2-ந் தேதியன்று டெல்லியில் கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில், தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் உறுப்பினர்களும், மத்திய அரசு பிரதிநிதிகளும் பங்கேற்கிறார்கள். இதில், பல்வேறு அம்சங்கள் பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அவசர கூட்டம் நேற்று மாலை நடத்தப்பட்டது. நேற்று மாலை சுமார் 4 மணிக்கு மேல் அவரது அறையில் இந்த கூட்டம் கூட்டப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், காமராஜ், ஓ.எஸ்.மணியன், துரைக் கண்ணு ஆகியோர் பங்கேற்றனர், இந்த கூட்டம் சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்றது
மேலும், தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப்பணித்துறையின் முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், நீர்வள துறையின் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் செந்தில்குமார் ஆகியோரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். டெல்லியில் ஜூலை 2-ந் தேதி நடக்கும் காவிரி மேலாண்மை ஆணைய முதல் கூட்டத்தில் தமிழக அரசுத் தரப்பில் என்னென்ன வாதங்கள் வைக்கப்பட வேண்டும் என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.