தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையத்தின் முதல் கூட்டம் - மு.சாய்குமார் தலைமையில் நடைபெற்றது

தலைமைச் செயலாளர் முனைவர் மு.சாய்குமார் தலைமையில் தலைமைச் செயலகத்தில் முதல் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையத்தின் முதல் கூட்டம் - மு.சாய்குமார் தலைமையில் நடைபெற்றது
Published on: 

சென்னை,

தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையத்தின் முதல் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் தலைமையில் முதலீட்டுத் திட்டங்களின் விரைவான செயலாக்கம், எளிய தொழில் அனுமதிகள், புதிய தொழிற்கொள்கை, ஏற்றுமதி மேம்பாடு குறித்து ஆய்வு நடைபெற்றது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

முதலீடுகள்

“தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல், தமிழ்நாட்டை தொழில் துறையில் முதன்மை மாநிலமாக உயர்த்திட பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறது. மேலும், 2036-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தை 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் இலக்குடனும் செயல்பட்டு வருகிறது.

முதல் கூட்டம்

இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு வணிக எளிதாக்குதல் (திருத்தச்) சட்டம், 2026 (சட்டம் எண் 15/2026) மூலம் சேர்க்கப்பட்ட பிரிவு 16-Aஇன் கீழ், அரசாணை (நிலை) எண் 240, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, நாள் 03.11.2026 மூலம் தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் (Tamil Nadu Investment Promotion Commission – TNIPC) முதல் கூட்டம் 13.11.2026 அன்று தலைமைச் செயலாளர் முனைவர் மு.சாய்குமார் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

தலைமைச் செயலாளர் தலைவராகவும், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் உறுப்பினர்-ஒருங்கிணைப்பாளராகவும் உள்ள இந்த ஆணையத்தில், நிதி, சுற்றுச்சூழல், தகவல் தொழில்நுட்பம், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள், நகராட்சி நிருவாகம், வீட்டுவசதித் துறை, உள்துறை, எரிசக்தி, வருவாய், இயற்கை வளங்கள், நீர்வளம், தொழிலாளர் நலன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை உள்ளிட்ட துறைகளின் செயலாளர்கள் உட்பட மொத்தம் 20 உறுப்பினர்கள் உள்ளனர்.

தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையத்தின் (TNIPC) முதல் கூட்டத்தில், தொழில் துறையைச் சேர்ந்த ஏ.விஸ்வநாதன், தலைவர், டெல்பி-டி.வி.எஸ். மற்றும் தலைவர், மெட்ராஸ் வர்த்தக மற்றும் தொழில் சபை (MCCI); எம்.பொன்னுசாமி, தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், பொன்பியூர் கெமிக்கல்ஸ் மற்றும் இணைத் தலைவர், இந்திய தொழில் கூட்டமைப்பின்(CII) தொழில் செய்வதை எளிதாக்குவதற்கான தேசியப் பணிக் குழு; முருகவேல் ஜனகராமன், தலைமைச் செயல் அலுவலர், மேட்ரிமோனி.காம் மற்றும் துணைத் தலைவர், இந்திய தொழில் கூட்டமைப்பு(CII) தமிழ்நாடு;

ரவிச்சந்திரன் புருஷோத்தமன், தலைவர், டான்பாஸ் மற்றும் தலைவர், இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) தென் மண்டலம்; பூபேஷ் நாகராஜன், இணைத் தலைவர், தமிழ்நாடு கவுன்சில், இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு(FICCI) ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.

இந்த ஆணையம், 200 கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட முதலீடுகள், 5,000 மற்றும் அதற்கு மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்கள், தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் சார்ந்த முதலீடுகள், வெளிநாடுவாழ் தமிழர்களின் முதலீடுகள் ஆகியவற்றின் முன்னேற்றத்தை ஆய்வு மேற்கொண்டது.

முதல் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டவை

* வெற்றித் தமிழகம் தொலைநோக்கு அறிக்கை: தொழில் துறைக்கான 37 தொலைநோக்கு அறிவிப்புகளின் நிலையைத் தலைமைச் செயலாளர் ஆய்வு செய்தார். இவற்றில் 18 அறிவிப்புகளுக்கான செயலாக்கம் (48 சதவீதம்) ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளது.

* புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs): மே 2026 முதல் 1.14 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட முதலீடு மற்றும் 1,42,271 நபர்களுக்கு வேலைவாயப்புகள் அளிக்கும் வகையில் 112 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இவற்றில் 83 ஒப்பந்தங்கள் நிலம் பெறப்பட்ட நிலை மற்றும் அதற்கு மேற்பட்ட நிலைகளை எட்டியுள்ளன; இதன்மூலம், இதுவரை 74.11 சதவீதம் ஒப்பந்தச் செயலாக்கம் எட்டப்பட்டுள்ளது.

* புதிய தொழிற்கொள்கை 2027: புதிய தொழிற்கொள்கை தயாரிப்பின் நிலை ஆய்வு செய்யப்பட்டது. ஜூலை மாதம் 2026 முதல் பல்வேறு பங்குதாரர்களுடன் கலந்தாலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன. மேலும், நடைமுறையில் உள்ள கொள்கைகளின் செல்லுபடிக்காலம் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. புதிய தொழிற்கொள்கை உருவாக்கும் பணிகளை விரைவுபடுத்த அறிவுரைகள் வழங்கப்பட்டன.

* வணிகம் புரிதலை எளிதாக்குதல்(Ease of Doing Business): மே மாதம் 2026 முதல் 23 அரசாணைகள் மூலம் 11 துறைகளைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

* புஞ்சை நிலத்தினை தொழில் தேவைகளுக்காகப் பயன்படுத்த வேளாண் துறையின் தடையின்மைச் சான்று பெறப்பட வேண்டும் என்ற நிலை நீக்கப்பட்டுள்ளது.

* மேலும், நஞ்சை நிலத்தினை தொழில் தேவைகளுக்காகப் பயன்படுத்த மாவட்ட ஆட்சியரிடம் தடையின்மைச் சான்று பெறவேண்டிய நிலையும் நீக்கப்பட்டுள்ளது.

* நகராட்சி நிருவாகத் துறையை பொறுத்தவரையில், வணிகம் புரிதலுக்கான உரிமத்திற்கான கால அவகாசம் 3 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

* பள்ளிக்கல்வித் துறை – தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரச் சான்றிதழின் செல்லுபடிக் காலம் 3 ஆண்டுகளிலிருந்து 20 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

* குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை – தொழில்மனை ஒதுக்கீடு 30 நாட்களுக்குள் வழங்கப்படும்.

இவ்வாறாக வழங்கப்பட்டுள்ள அனைத்து சீர்திருத்தங்களையும் அனைத்து தொழில் நிறுவனங்கள் மற்றும் அனைத்துத் தரப்பினரும் அறிந்து கொள்ளும் வகையில் விளம்பரப்படுத்த அறிவுரை வழங்கப்பட்டது.

தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான அனைத்து அனுமதிகள் / உரிமங்கள் / தடையின்மைச் சான்றிதழ்கள் ஆகியவற்றை வழங்கக்கோரி வழிகாட்டி நிறுவனத்தின் ஒற்றைச்சாளர இணையதளம் மூலம் பெறப்பட்ட 21,753 விண்ணப்பங்களில், 19,323 விண்ணப்பங்களுக்குத் (96.4 சதவீதம்) தீர்வு காணப்பட்டுள்ளது.

இதுவரை தொழில் நிறுவனங்களுக்கு வழங்கிடும் அமைப்பு முறையிலான தொகுப்புச் சலுகை திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு 1,700 கோடி ரூபாய் வழங்கி வந்த நிலையில், தொழில் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் தற்போது கடந்த 6 மாதங்களில் மட்டும் 2,000 கோடி ரூபாய் மானியம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து மேலும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்ட புதிய திட்டங்களுக்கும் மானியம் வழங்கிட ஆணையம் அறிவுறுத்தியது. இதற்காக, மேலும் கூடுதலாக 1,600 கோடி ரூபாய் நிதியினை ஒதுக்கிட கோரப்பட்டது.

ஏற்றுமதி

தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் (FTAs) மூலம் உருவாகும் புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்தி, தமிழகத் தொழில் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தைகளில் தங்களது பங்களிப்பை உயர்த்திடவும், சரக்குகள் ஏற்றுமதியை தற்போதுள்ள 59 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலிருந்து 72 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடையவும், தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவரும் பல்வேறு முன்னெடுப்புகள் குறித்து ஆய்வுசெய்யப்பட்டது. இந்திய அரசின் NIRYAAT PROTSAHAN மற்றும் NIRYAAT DISHA திட்டங்களின் கீழ், DPIIT நிர்ணயித்த ரூ.371 கோடி இலக்கிற்கு எதிராக, ரூ.192 கோடி மதிப்பிலான விண்ணப்பங்களைச் சமர்ப்பித்ததற்காக மேற்கொள்ளப்பட்ட சிறப்பான முயற்சிகளை ஆணையம் பாராட்டியது.

தொழில் பூங்காக்கள்

சிப்காட், சிட்கோ, டிட்கோ, எல்காட் தொழில் பூங்காக்களில் நில ஒதுக்கீடு சிப்காட், டிட்கோ நிறுவனங்களின் வரவிருக்கும் மற்றும் புதிதாகக் கண்டறியப்பட்ட தொழில் பூங்காக்களின் செயலாக்கம் மற்றும் நில எடுப்புநிலை, பிஎம் மித்ரா (PM MITRA) பூங்காவில் நில ஒதுக்கீட்டு முன்னேற்றம் ஆய்வு செய்யப்பட்டது.

டிட்கோ மற்றும் டைடல் திட்டங்கள்

தமிழ்நாடு அறிவுசார் நகரம் (TN Knowledge City), அறிவகம் செயற்கை நுண்ணறிவு நகரம் (Arivagam AI City), கோயம்புத்தூர் டிஜிட்டல் ஃபின்டெக் மையம், திருச்சிராப்பள்ளி பல்முனையச் சரக்குப் போக்குவரத்து மையம் (Multimodal Logistics Hub) ஆகிய டிட்கோ திட்டங்களின் முன்னேற்றமும், டைடல் நியோ (TIDEL Neo) திட்டங்கள் மற்றும் மைக்ரோடெக் பூங்காக்களின் நிலையும் ஆய்வு செய்யப்பட்டன.

உலகளாவிய திறன் மையங்கள் (GCCs)

தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, பொறியியல் வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறைகளில் உயர்திறன் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் GCC வழித்தடம் (GCC Corridor) அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தொழில் முதலீடுகளை ஊக்குவித்தல் தொடர்பான மேற்படி பொருண்மைகளை ஆய்வு செய்த பின்னர், ஆணையம், கீழ்க்காணும் முடிவுகளை அறிவித்தது:

1) திருத்தப்பட்ட வணிக எளிதாக்கச் சட்டத்தின்படி, 21 நாட்களுக்குள் அனுமதிகள் வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், அனைத்துத் துறைகளும் இக்காலக்கெடுவைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என ஆணையம் அறிவுறுத்தியது.

2) 21 நாட்கள் காலக்கெடு முடிவடைந்த பின்னர், அனுமதி வழங்கப்பட்டதாகக் கருதும் நடைமுறையை (Deemed Approval) அறிவிக்கை செய்து, விதிமீறலுக்குப் பொறுப்பானவர்கள் மீது அபராத நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும்.

3) தொழிற்சாலைகள் தங்களின் உயர்அழுத்த (HT) மற்றும் மின்னணு உயர்அழுத்த (EHT) இணைப்புகளைத் தாங்களே செயல்படுத்தும் முறையில் அமைத்துக்கொள்ள தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL) அனுமதிக்கும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

4) பெரிய அளவிலான மேம்பாட்டுத் திட்டங்களுக்கு, இணைப்புகளுக்குத் தேவையான மின்சார உபகரணங்களை மேம்பாட்டாளர்கள் தாங்களாகவே கொள்முதல் செய்துகொள்ளவும் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL) அனுமதிக்கும் எனவும் ஆணையம் அறிவுறுத்தியது.

5) மின்சாரம், தண்ணீர் மற்றும் சாலைகள் தொடர்பான உள்கட்டமைப்புப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தொழிற்சாலைகளின் மின்சாரம் மற்றும் தண்ணீர் தேவைகளை அடுத்த 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தேவைகளை மதிப்பிடுமாறு சிப்காட் (SIPCOT) அமைப்புக்கு அறிவுறுத்தப்பட்டது.

6) தொழில் தொடங்கத் தகுதியான மனைகள் பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இவற்றை அடையாளம் கண்டு, ஆர்வமுள்ள முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கீடு செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

7) SIPCOT, TIDCO மற்றும் ELCOT ஆகிய நிறுவனங்களிடம் பயன்பாட்டில் இல்லாமல் உள்ள நிலங்களை ஆய்வு செய்து, அவற்றை ஆர்வமுள்ள முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும்.

8) மாநிலத்தின் ஏற்றுமதியை 59 பில்லியன் அமெரிக்க டாலர் ஏற்றுமதியிலிருந்து 72 பில்லியன் அமெரிக்க டாலர் நிலையை அடைவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். மேலும், மாநில அளவிலான ஏற்றுமதி கருத்தரங்கம் நடத்தப்பட்டது போலவே மாவட்ட அளவிலும் அவ்வாறான கருத்தரங்குகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

9) தொழிலகங்கள் தொழில் துவங்க அனுமதிகோரி பெறப்பட்டுள்ள பல்வேறு துறைசார்ந்த விண்ணப்பங்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து தீர்வுகாண அனைத்துத் துறைகளுக்கும் ஆணையம் அறிவுரை வழங்கியது.

10) சுற்றுலாத் துறை சார்ந்த திட்டங்களையும் தொழில் திட்டங்களாகக் கருதி, உடனடியாக ஒற்றைச்சாளர தீர்வுமுறையில் விரைந்து செயல்படுத்திட அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையத்தில் பங்கேற்ற தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், குறுகிய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வணிகம் புரிதலை எளிதாக்குதல் நடவடிக்கைகள் எடுத்துள்ளமைக்கும், தொழிலகங்களுக்கான தொகுப்புச் சலுகை மானியம் விரைவாக வழங்கியதற்கும், சிப்காட் தொழில்மனைகளை வெளிப்படைத் தன்மையோடு செய்தித்தாள்களில் விளம்பரம் செய்து எந்தவித ஒளிவுமறைவுமின்றி ஒதுக்கீடு செய்ததற்கும் தங்களது நன்றிகளைத் தெரிவித்தார்கள்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X