

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. அமோகமாக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்-அமைச்சராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 7-ந்தேதி கவர்னர் மாளிகையில் பதவியேற்றார். இதனை தொடர்ந்து தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றுக்கொள்கின்றனர்.
அவர்கள் பதவியேற்றுக்கொள்வதற்கு வசதியாக தற்காலிக சபாநாயகராக தி.மு.க.வை சேர்ந்த கீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கு.பிச்சாண்டியை கவர்னர் பன்வாரிலால் புரோகித் நியமித்துள்ளார். இதையடுத்து சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை 10 மணியளவில் சட்டசபை கூடியது.
சட்டசபை கூட்டத்திற்கு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, சட்டப்பேரவை செயலாளர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். சட்டசபை கூட்டத்தை தொடங்கி வைத்த தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி, மக்கள் மனதில் இடம் பெற்று தேர்தலில் வெற்றி வாகை சூடிய முதல்-அமைச்சர் என மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து எம்.எல்.ஏக்கள் அனைவரும் அகர வரிசையில் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர். எம்.எல்.ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.