சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் 11-ந் தேதி தொடங்குகிறது புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்கிறார்கள்

சென்னை கலைவாணர் அரங்கத்தில் 16-வதுசட்டசபையின் முதல் கூட்டம் வருகிற 11-ந் தேதி நடக்கிறது. இதில் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பார்கள்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் 11-ந் தேதி தொடங்குகிறது புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்கிறார்கள்
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவி ஏற்றுள்ளார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவி ஏற்றுள்ளனர்.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்க வேண்டும். இதற்காக சட்டசபை கூட்டப்படஉள்ளது.

முதல் கூட்டத்தொடர்

இதுகுறித்து தமிழக சட்டசபையின் செயலாளர் கி.சீனிவாசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

16-வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் வருகிற 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தின் 3-வது தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கத்தில் தொடங்குகிறது.

அப்போது வெற்றி பெற்ற வேட்பாளர்கள் 234 பேரும் உறுதிமொழி அல்லது பற்றுறுதி பிரமாணம் எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும். சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான தேர்தல் சான்றிதழை உறுப்பினர்கள் தவறாமல் கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பற்றுறுதி பிரமாணம்

இந்த 234 உறுப்பினர்களுக்கும் சட்டசபையில் தற்காலிக சபாநாயகர் உறுதி பிரமாணம் செய்து வைப்பார். தற்காலிக சபாநாயகருக்கு கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

அதன் பின்னர் தற்காலிக சபாநாயகர், 11-ந் தேதி சட்டசபையில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் எம்.எல்.ஏ.வாக பற்றுறுதி பிரமாணம் செய்து வைப்பார்.

சபாநாயகர் தேர்தல்

சட்டசபை செயலாளர் கி.சீனிவாசன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், சட்டப்பேரவைத் தலைவர் (சபாநாயகர்) மற்றும் பேரவை துணைத்தலைவர் (துணை சபாநாயகர்) பதவிக்கான தேர்தல்கள் 12-ந் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, சபாநாயகர்பதவிக்கு கட்சி ரீதியாக வேட்புமனு தாக்கல் செய்யப்பட வேண்டும். 12-ந் தேதி காலை 10 மணிக்கு சட்டசபை கூடும் நிலையில், முந்தைய நாள் 11-ந் தேதி பகல் 12 மணிக்குள் சட்டசபை செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட வேண்டும்.

சட்டசபையில் வாழ்த்து

12-ந் தேதி காலை 10 மணிக்கு சபாநாயகர் தேர்தலை சட்டசபையில் தற்காலிக சபாநாயகர் நடத்துவார். ஒருவர் தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாவிட்டால், அவரை சபாநாயகராக தற்காலிக சபாநாயகர் அறிவிப்பார். அதைத்தொடர்ந்து சட்டசபையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் தரப்பில் சபாநாயகரை வாழ்த்துவார்கள்.

பின்னர் அவை முன்னவரும், எதிர்க்கட்சி தலைவரும் சேர்ந்து சபாநாயகர் இருக்கையில் அவரை அமர வைப்பார்கள்.

சபாநாயகர் பதவி தேர்தலுக்கான வேட்புமனுவை ஒருவருக்கு மேற்பட்டோர் தாக்கல் செய்திருந்தால், சட்ட சபையில் வாக்குச்சீட்டின் மூலம் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, அதிக வாக்கு பெறுபவர் சபாநாயகராக தேர்வு செய்யப்படுவார்.

தற்காலிக சபாநாயகர் பிச்சாண்டி

இந்த நிலையில் நேற்று மாலை சட்டசபை செயலாளர் கி.சீனிவாசன் மற்றொரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், கீழ்பெண்ணாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான கு.பிச்சாண்டியை தற்காலிக சபாநாயகராக கவர்னர் நியமித்துள்ளார். அவர் 10-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு கவர்னர் முன்பு உறுதிமொழி அல்லது பற்றுறுதி பிரமாணம் எடுத்துக்கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com