படுகர் இனத்தில் முதல் பெண் விமானி..!

நீலகிரி மாவட்டத்தில் படுகர் இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் விமான பைலட்டாகி சாதனை படைத்துள்ளார்.
படுகர் இனத்தில் முதல் பெண் விமானி..!
Published on

நீலகிரி,

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் உள்ள மலையோர கிராமங்களில் படுகர் சமுதாய மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இவர்களின் குடும்பத்தில் பலர் கடந்த சில ஆண்டுகளாக மேற்படிப்பு முடித்து, மத்திய-மாநில அரசுகளில் பெரிய, பெரிய பதவிகளை அலங்கரித்து வருகின்றனர்.

அந்த வகையில் கோத்தகிரியை சேர்ந்த இளம்பெண் ஜெயஸ்ரீ என்பவர் தென்னாப்பிரிக்காவில் விமானப்பயிற்சி முடித்து தற்போது அங்கேயே விமானியாகி உள்ளார். மலைவாழ் மக்களான படுகர் சமுதாயத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் விமான பைலட்டாகி சாதனை படைத்துள்ளது அந்த சமுதாய மக்களை பெருமை அடையச் செய்துள்ளது. மேலும் ஜெயஸ்ரீ, படுகர் சமுதாயத்தில் விமான பைலட்டாகும் முதல் பெண் என்ற சாதனையையும் படைத்து இருக்கிறார். அவருக்கு பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

சாதனை படைத்த ஜெயஸ்ரீ கூறியதாவது:-

படுகர் சமுதாயத்தைச் சேர்ந்த நான் கோத்தகிரி பகுதியில் உள்ள நெடுகுளாகுருக்கத்தி கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். என் தந்தை மணி கிராம நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வுபெற்றவர். தாய் மீரா இசை ஆசிரியை. நான் கோத்தகிரியில் உள்ள தனியார் பள்ளியில் படித்தேன். அப்போது எதிர்காலத்தில் விமானியாக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இதனை நான் என் பெற்றோரிடம் தெரிவித்தேன். அவர்கள் எனக்கு ஆதரவாக இருந்தனர்.

தென்னாப்பிரிக்காவுக்கு சென்று அங்கு உள்ள ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் சேர்ந்து பைலட் பட்டயப்படிப்பு முடித்தேன். இதன் பயனாக நான் தற்போது விமானியாக வேலைபார்த்து வருகிறேன். தற்போது என்னிடம் பிரைவேட் பைலட் லைசென்ஸ் சான்றிதழ் உள்ளது. அடுத்தபடியாக வர்த்தக பைலட் லைசென்ஸ் படிப்புக்கு தயாராக வேண்டும்.

நீலகிரியில் படுகர் சமுதாயத்தில் பிறந்து வளர்ந்த நான் இன்றைக்கு உலகளவில் சாதனை படைத்து உள்ளேன் என்றால் அதற்கு என் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஊக்கம்தான் காரணம். உங்கள் இலக்கை நேக்கி தன்னம்பிக்கையுடன் பயணியுங்கள். அப்படி செய்தால் உங்களின் எதிர்கால கனவு நிச்சயம் வசப்படும். தன்னம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com