மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 65 ஆயிரம் கன அடியாக சரிவு

அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் அணை நீர்மட்டம் 8-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 65 ஆயிரம் கன அடியாக சரிவு
Published on

சேலம்,

கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகள் நிரம்பின. இதனால் 2 அணைகளில் இருந்தும் அதிகளவில் உபரிநீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைய தொடங்கியதால் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 34 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

கபினி அணையில் இருந்து 980 கன அடி, ஹேரங்கி அணையில் இருந்து 500 கன அடி, ஹேமாவதி அணையில் இருந்து 4 ஆயிரத்து 800 கன அடி என மொத்தம் 40 ஆயிரத்து 280 கன அடி உபரிநீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, பிலிகுண்டுலு, நாட்றாம்பாளையம், ராசிமணல், கேரட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை நின்றது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது.

அதன்படி நேற்று மாலை ஒகேனக்கல்லுக்கு விநாடிக்கு 88 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலையில் விநாடிக்கு 78 ஆயிரம் கன அடியாக சரிந்தது. இருந்தாலும் ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகள் தெரியாத அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அருவியில் குளிப்பதற்கும், பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. நேற்று காலையில் அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 45 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து மாலையில் வினாடிக்கு 75 ஆயிரம் கன அடியாக சரிந்தது. இன்று காலை மேலும் சரிந்து விநாடிக்கு 65 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து விநாடிக்கு 65,200 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளன. அதாவது, நீர்மின் நிலையங்கள் வழியாக 21,500 கன அடி தண்ணீரும், உபரி நீர்ப்போக்கியான 16 கண் மதகுகள் வழியாக 43,500 கன அடி தண்ணீரும், கால்வாயில் 200 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகின்றன.அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் அணை நீர்மட்டம் 8-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com