மலட்டாற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரால் தரைப்பாலம் மூழ்கியது

விழுப்புரம் அருகே மலட்டாற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரால் தரைப்பாலம் மூழ்கியதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மலட்டாற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரால் தரைப்பாலம் மூழ்கியது
Published on

தரைப்பாலம் மூழ்கியது

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இவ்வாறு தொடர்ந்து பெய்து வரும் மழையினால் தென்பெண்ணையாறு, மலட்டாறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனிடையே தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணை நிரம்பியது. இதனால் அதில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால் தென்பெண்ணையாற்றில் தற்போது தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

அதுபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.பி. அணையில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் தென்பெண்ணையாறு மற்றும் அதன் கிளை ஆறான மலட்டாற்றிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக விழுப்புரம் அருகே பில்லூர்- சேர்ந்தனூர் இடையே உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளது.

போக்குவரத்து துண்டிப்பு

தரைப்பாலத்திற்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பில்லூர், குச்சிப்பாளையம், அரசமங்கலம் வழியாக பண்ருட்டி செல்லும் சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆனாங்கூர், பில்லூர், தென்மங்கலம், அரசமங்கலம், பிள்ளையார்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக பண்ருட்டி செல்வதற்கு பிரதான சாலையாக உள்ள இந்த தரைப்பாலத்தில் தற்போது பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரால் வாகன போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மேற்கண்ட கிராம மக்கள் அத்தியாவசிய தேவைக்காகவும் மற்றும் வேலைக்கு செல்லவும் சுமார் 10 கி.மீ. தூரம் சுற்றிக்கொண்டு விழுப்புரம் வந்து பின்னர் பண்ருட்டி செல்கின்றனர். சிலர், வாகனங்களில் ஆபத்தை உணராமல் தரைப்பாலத்தை கடந்து செல்கின்றனர்.

பல ஆண்டுகளாக மேம்பாலம் அமைக்க இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் மழை வெள்ளத்தின்போது பில்லூர், சேர்ந்தனூர் கிராம மக்கள் பாதிப்பிற்குள்ளாகின்றனர்.

மேலும் இந்த தரைப்பாலத்தில் அதிகளவு தண்ணீர் செல்வதால் அதனை வேடிக்கை பார்க்க கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் தரைப்பாலத்திற்கு வந்து அங்கு ஓடும் தண்ணீரில் ஆபத்தை உணராமல் இறங்கி விளையாடுகின்றனர். ஆகவே ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கும் வகையில்

தரைப்பால பகுதியில் தடுப்புகள், எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com