

சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தை முதன்முறையாக சந்தித்த விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து வரலாற்றில் இடம்பிடித்து உள்ளது. இந்த வெற்றி உற்சாகத்தில் விஜய், கவர்னர் அர்லேகரை சந்தித்து தவெகவை ஆட்சி அமைக்க அழைக்குமாறு உரிமை கோரினார்.
ஆனால் கவர்னர் அர்லேகர், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பதால், 118 எம்.எல்.ஏ.க்கள் பெயர் பட்டியலை வழங்கினால்தான் ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும் என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.
முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி, மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டு விட்டது. ஏற்கனவே இருந்த சட்டமன்றத்தையும் கலைத்து கவர்னர் அவர்கள் ஆணையும் பிறப்பித்து விட்டார்.
இப்படியொரு நிலையில், தேர்தலில் வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி பிரமாணம் எடுத்து கொள்வதற்கும், மாநிலத்தின் நலனை முன்னெடுத்து செல்வதற்கும் புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மிக முக்கிய பணி!
இந்த சூழ்நிலையில் அரசு அமைவதில் தாமதம் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு, அரசியல் சட்டப்படி, புதிய ஆட்சி அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை கவர்னர் அவர்கள் உடனடியாக எடுத்திட வேண்டும் என திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.