

திருச்சி,
திருச்சி விமான நிலையத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தி.மு.க.விற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் நெருடல் இருப்பது போல் தோன்றும். ஆனால் அது மறைந்து போகும். தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி, ராகுல்காந்தியை சந்தித்து பேசியதில் நெருடல் இருக்காது. இதனை அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்ததோடு ஒப்பிடுவதற்கு, எடப்பாடி பழனிசாமி தகுதியற்றவர். அ.தி.மு.க.வை பா.ஜனதா தலைவர்கள் எவ்வளவு அவமானப்படுத்தினாலும், அதை சகித்துக் கொண்டிருந்தவர்தான் பழனிசாமி.
வருகிற பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஓர வஞ்சனை செய்வார்கள். இருந்தபோதும் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாட்டை இதுவரை இல்லாத அளவிற்கு புகழ்வார்கள். தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி விடலாம் என பிரதமர் மோடி காணும் பகல் கனவு ஒருபோதும் பலிக்காது.
தி.மு.க. கூட்டணி 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும் என்று முதல்-அமைச்சர் கூறியுள்ளார். அதையே நானும் வழிமொழிகிறேன். தி.மு.க. கூட்டணியில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து தி.மு.க. தலைமையிடம் பேசி அதன்பின்னர் முடிவெடுப்போம். எந்த சின்னத்தில் போட்டி என்பதை பொறுத்திருந்து பாருங்கள். இவ்வாறு அவர் கூறினார்.