

சென்னை,
சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில், தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் கஜா புயல் தாக்கிய பகுதிகளில் மக்கள் மிகவும் துயரத்துடன் பரிதவித்து வருகிறார்கள். நாம் நினைத்துக்கொண்டிருப்பதை விட புயலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்பதே உண்மை. குடிநீர், மின்சாரம், உடைகள் என அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். சில கிராமங்களுக்கு அதிகாரிகள் சென்று பார்க்கக்கூட இல்லை.
இதனால் மக்கள் ஆத்திரத்தில் சாலை மறியல், அதிகாரிகளை முற்றுகையிடுவது போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் உண்மையிலேயே உதவி செய்ய வருபவர்களையும் மக்களின் கோபம் தடுத்து விடுகிறது. எனவே மக்கள் கொஞ்சம் பொறுமை காப்பது நல்லது என்பது என் கருத்து.
மக்களின் நியாயமான போராட்டங்களை சிலர் தூண்டிவிடுகிறார்கள் என்பது தான் உண்மை. தவறு என்பதால் இதனை சுட்டிகாட்டுகிறேன். இந்த கட்சி, அந்த கட்சி என்று தூண்டிவிடுபவர்களை சுட்டிக்காட்ட விரும்பவில்லை.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதல்-அமைச்சர் உடனடியாக செல்லாதது குறித்தும் விமர்சனம் செய்கிறார்கள். முதல்- அமைச்சர் உடனடியாக செல்லாததற்கு நிர்வாக ரீதியாக ஏராளமான காரணங்கள் இருக்கலாம். எதையும் தவறாக பார்ப்பது நல்லதல்ல. இப்போதைய சூழ்நிலையில் விமர்சனம் செய்வது முக்கியமல்ல. அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து அரசியல் செய்துகொண்டிருக்காமல் களத்தில் இறங்கி மக்களுக்கான அவசியமான காரியங்களில் ஈடுபடுவதே முக்கியம்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இருப்பது இதயமா? இரும்பா? என்றெல்லாம் கூறி பட்டிமன்றம் நடத்துவது சரியல்ல. கேரளாவில் பெருவெள்ளம் வந்தசமயத்தில் நிர்வாக ரீதியான திட்டமிட்ட பயணத்தை மேற்கொண்டு அம்மாநில முதல்- மந்திரி பினராயி விஜயன் அரபு நாடுகளுக்கு சென்றுவந்தார்.
அப்போதெல்லாம் அமைதி காத்துவிட்டு, இப்போது முக்கிய காலகட்டத்தில் பேசவேண்டியதை பேசாமல் தேவையற்றதை பேசி வருகிறோம். எனவே குறைகூறிக்கொண்டு இருப்பதை எதிர்க் கட்சிகள் நிறுத்திட வேண்டும்.
மத்திய அரசு எப்போதுமே தமிழக அரசுக்கு உதவ தயாராகவே இருக்கிறது. அந்தவகையில் தமிழக பா.ஜ.க. விவசாய அணி மாநில துணைத்தலைவர் ஜி.கே.நாகராஜ் தலைமையில் 5 பேர் கொண்ட ஆய்வுக் குழு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த குழு பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று ஆய்வுமேற்கொண்டு, அதை அறிக்கையாக அளிப்பார்கள். அந்த அறிக்கையை தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் நாங்கள் அனுப்புவோம்.
உண்மையான நிலவரத்தை எடுத்துக்கூறி தமிழகத்துக்கு வேண்டிய உதவிகளை மத்திய அரசிடம் இருந்து பெற்று தருவோம். அதேபோல மருத்துவ உதவிகளுக்காக பேரிடர் மேலாண்மை குழுவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட இருக்கிறது. தமிழக பா.ஜ.க. சார்பில் முதல்கட்டமாக ரூ.10 லட்சம் ஒதுக்கப்பட்டு, நிவாரண பகுதிகள் நடந்து வருகின்றன. மேலும் நிதி ஒதுக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக தமிழக பா.ஜ.க. வில் உள்ள கூட்டுறவுத்துறை, திருவள்ளூர் கிழக்கு, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், வேளச்சேரி, ஆயிரம்விளக்கு, சைதாப்பேட்டை, தியாகராயநகர், மாதவரம் உள்ளிட்ட மாவட்டங்கள்- மண்டலங்கள் சார்பில் நிதியாகவும், அரிசி, பிஸ்கெட், குடிநீர், மருந்துகள், நைட்டி உள்பட உடைகள் உள்ளிட்ட சேகரிக் கப்பட்ட நிவாரண பொருட் கள் தமிழிசை சவுந்தரராஜனிடம் வழங்கப்பட்டது.
இந்த முதற்கட்ட நிவாரண பொருட்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது. அடுத்தடுத்த கட்டங்களாக நிவாரண பொருட்கள் சேகரித்து புயல் பாதித்த மக்களுக்கு அனுப்பி வைக்கப்படும், என்று தமிழிசை சவுந்தரராஜன் அப்போது தெரிவித்தார்.