பேத்தியை மீட்டு தரக்கோரி பெண் தீக்குளிக்க முயற்சி

பேத்தியை மீட்டு தரக்கோரி, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பேத்தியை மீட்டு தரக்கோரி பெண் தீக்குளிக்க முயற்சி
Published on

தீக்குளிக்க முயற்சி

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று ஒரு பெண் மனு கொடுக்க வந்தார். அப்போது திடீரென அவர் பாட்டிலில் மறைத்து கொண்டு வந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அதை பார்த்த போலீசார் துரிதமாக செயல்பட்டு, அவரை தடுத்து மீட்டனர். மேலும் அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் பழைய வத்தலக்குண்டுவை சேர்ந்த தனலட்சுமி (வயது 50) என்பது தெரியவந்தது. மேலும் அவர் போலீசாரிடம் கூறுகையில், எனது மகள் பானுப்பிரியா கணவருடன் சென்னையில் வசித்து வருகிறார். எனது பேத்தி என்னுடன் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு திவ்யாவை ஒருவர் கடத்தி சென்று விட்டார்.

இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எனது பேத்தியை மீட்டு தரவில்லை. இதனால் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த போது விரக்தியில் தீக்குளிக்க முயன்றேன், என்று தெரிவித்தார். அதையடுத்து அவருக்கு அறிவுரை கூறி மனு கொடுக்க போலீசார் அனுப்பி வைத்தனர்.

பூச்சிகொல்லி மருந்துடன் வந்தனர்

இதேபோல் பாளையம் அடுத்த காச்சக்காரபட்டியை சேர்ந்த 4 பெண்கள், 3 சிறுவர்கள் என 7 பேர் மனு கொடுக்க வந்தனர். அவர்களை தனித்தனியாக போலீசார் சோதனை செய்தனர். அதில் கன்னியம்மாள் என்பவர் பூச்சிக்கொல்லி மருந்தை மறைத்து கொண்டு வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். உடனே அதை பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து கன்னியம்மாள் கூறுகையில், காச்சக்காரன்பட்டியில் பல ஆண்டுகளாக வசித்து வரும் வீடுகளுக்கு பட்டா கேட்டு பல முறை மனு கொடுத்தோம். இதுவரை பட்டா கிடைக்கவில்லை. இந்த நிலையில் 2 பேர் எங்களுடைய வீட்டை காலி செய்யும்படி மிரட்டுகின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுடைய வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும், என்று அவர் உள்பட 4 பெண்களும் கதறி அழுதனர்.

மண்எண்ணெயுடன் வந்த முதியவர்

இதற்கிடையே மற்றொரு முதியவரின் பையை போலீசார் சோதனை நடத்திய போது, அவர் மண்எண்ணெய் கொண்டு வந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர் முன்னிலைக்கோட்டையை அடுத்த ஆரியநல்லூரை சேர்ந்த பாக்கியநாதன் (65) என்பதும், பட்டா கேட்டு மனு கொடுக்க வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு அறிவுரைகள் கூறி மனு கொடுக்க போலீசார் அழைத்து சென்றனர். இந்த சம்பவங்களால் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com