காதலை ஏற்க மறுத்த பெண்: வாலிபர் எடுத்த விபரீத முடிவு

காதலுக்கு இளம்பெண் மறுப்பு தெரிவித்ததால் வாலிபர் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சேலம்,

சேலம் அருகே அமானி கொண்டலாம்பட்டி கிழக்கு வட்டத்தை சேர்ந்தவர் கணேசன் (55 வயது). இவருடைய மகன் லோகநாதன் (25 வயது). ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் அதேபகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். சமீபத்தில் அந்த பெண்ணிடம் லோகநாதன் தனது காதலை வெளிப்படுத்தியதாகவும், அதற்கு அந்த பெண் காதலிக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்தாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனவேதனையில் இருந்து வந்த அவர், கடந்த 20 நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கு லோகநாதனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து குணமாகி கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடு திரும்பினார். இருப்பினும் அந்த பெண்ணை நினைத்து தினமும் அவர் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த லோகநாதன் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் அருகே ஒருதலை காதலால் மனம் உடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com