'தி.மு.க.வின் ஊழல் ஆட்சியை நாடே அறிந்திருக்கிறது' - ராஜ்நாத் சிங் கடும் விமர்சனம்

பா.ஜ.க.வை ஆட்சியில் அமர்த்தினால் ஊழல் செய்தவர்கள் சிறையில் இருப்பார்கள் என்று மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
'தி.மு.க.வின் ஊழல் ஆட்சியை நாடே அறிந்திருக்கிறது' - ராஜ்நாத் சிங் கடும் விமர்சனம்
Published on

சென்னை,

சென்னையை அடுத்த தாம்பரத்தில் இன்று நடைபெறும் பா.ஜ.க. சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;-

"நாட்டில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் தமிழ் மொழி தான் தாய். தமிழ்நாட்டில் ராஜ ராஜ சோழன், சேரர்கள் கடற்படையில் திறமையாக விளங்கினர். திருவள்ளுவர் பிறந்த தமிழ்நாட்டிற்கு இன்று நான் வந்துள்ளேன் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. திருக்குறளில் உள்ள சிறந்த வரிகள் வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறது. சித்தர்கள், ஆழ்வார்கள் இந்த பூமியில் உள்ளனர் என்பது பெருமையாக உள்ளது.

பழமை வாய்ந்த செங்கோல் என்ற சொல் தமிழ்நாட்டிற்கு மட்டும் தான் தெரிந்திருந்தது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் செங்கோலை நிறுவிய பிறகு மொத்த இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு நபருக்கும் செங்கோலின் பெருமை தெரியவந்துள்ளது. அதன் பிறகு ஒரு புதிய வரலாறு தமிழகத்திற்காக எழுதப்பட்டுள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் பல முன்னேற்றங்கள் நடந்து கொண்டே இருந்தது. ஆனால் வளர்ச்சி விகிதம் மிக குறைவாக இருந்தது. சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து உலக நாடுகள் மத்தியில் இந்தியாவிற்கு மிகப்பெரிய மதிப்பு கிடைக்கவில்லை. இந்தியாவின் குரலுக்கு யாரும் செவி சாய்க்காமல் இருந்தார்கள். ஆனால் இன்று இந்தியா என்ன சொல்லப் போகிறது என்று உலக நாடுகள் அத்தனையும் காத்துக் கொண்டிருக்கிறது. அப்படி ஒரு ஆட்சியை பிரதமர் நரேந்திர மோடி வழங்கிக் கொண்டிருக்கிறார்.

பா.ஜ.க. மக்கள் வளர்ச்சிக்காக கட்சி நடத்துகிறது. பிற கட்சிகள் ஆட்சியை பிடிப்பதற்காக கட்சி நடத்துகின்றன. தி.மு.க.வின் ஊழல் ஆட்சியை நாடே அறிந்திருக்கிறது. தமிழகத்தில் தற்போது நடக்கும் ஆட்சியில் பெருமளவு ஊழல் நடக்கிறது. பா.ஜ.க.வை ஆட்சியில் அமர்த்தினால் ஊழல் செய்தவர்கள் சிறையில் இருப்பார்கள்.

இவ்வாறு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com