

சென்னை,
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில், மேலும் 2 டி.என்.ஏ. ஆய்வகங்களை மாநிலத்தில்அமைக்க உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
சென்னை ஐகோர்ட்டில் இன்று நடந்த வழக்கு விசாரணையின் போது, தலைமை வழக்கறிஞர் வழியே தமிழக அரசு அறிக்கை அளித்தது. அதில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் மற்றும் இதர குற்றவியல் வழக்குகளின் விசாரணைகளிலும், நீதிமன்ற நடவடிக்கைகளிலும் தாமதத்தை தவிர்க்கும் வகையில் மேலும் 2 டி.என்.ஏ. ஆய்வகங்களை மாநிலத்தில் அமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
தற்போது மாநிலத்தில் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே தடையவியல் துறை மூலம் டி.என்.ஏ. பரிசோதனை வசதிகள் உள்ளன. இதனால், ஆய்வக அறிக்கைகள் பெற காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்க கூடுதல் மையங்கள் நிறுவப்படுகின்றன. டி.என்.ஏ. சோதனைகளின் முடிவுகள் விரைவாகக் கிடைக்கும்போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைத் தாமதமின்றி வழங்க முடியும்.
தடய அறிவியல் துறை மற்றும் பிராந்திய ஆய்வகங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம், நீதிமன்றங்களில் வழக்குகளின் முடிவுகள் விரைந்து வெளிவர வாய்ப்பு ஏற்படும். இதுவரை தமிழ்நாட்டில் உள்ள குற்ற வழக்குகளுக்கான டி.என்.ஏ. பரிசோதனைகள் பெரும்பாலும் சென்னையில் உள்ள ஒரே மையத்தை மட்டுமே நம்பி இருந்தன. இந்த புதிய ஆய்வகங்கள் செயல்பாட்டுக்கு வரும்போது முடிவுகள் மிக விரைவாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே பெரும்பாலான வழக்குகளில் வழக்கறிஞர்கள் தான் விசாரணையை தள்ளிவைக்க கேட்கின்றனர் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். முன்னதாக பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட ஆந்திர பெண் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.