

சென்னை,
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மாதம் 10-ந் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தொடக்கத்தில் எதிர்பார்த்த அளவுக்கு பலன் கிடைக்காததால், தமிழகத்தில் ஊரடங்கினை 5-வது முறையாக மேலும் ஒரு வாரத்துக்கு, அதாவது 21-ந் தேதி காலை 6 மணி வரை தளர்வுகளுடன் நீட்டித்து மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அந்த தளர்வில் 11 மாவட்டங்களைத் தவிர, இதர 27 மாவட்டங்களில் நோய்த்தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுடன் கூடுதலாக தளர்வுகள் அளிக்கப்பட்டன.
அழகு நிலையங்கள், சலூன்கள் குளிர் சாதன வசதி இல்லாமலும், ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டது.
மேலும் கோவில்கள், வழிபாட்டு தலங்களில் பொதுமக்களை அனுமதிப்பதற்கான தடை தொடருகிறது. அதுபோல பொதுபோக்குவரத்தும் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில், கொரோனா தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் நகர பேருந்துகளை மட்டும் இயக்க அரசு முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 50 சதவீத பேருந்துகளை மட்டுமே இயக்குவதற்கு ஏற்ப போக்குவரத்து கழகங்கள் ஆயத்தமாக உள்ளதாகவும் இந்த வார இறுதிக்குள் பேருந்து இயக்கத்தை துவங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாவட்டத்துக்குள் மட்டுமே பேருந்து சேவை இருக்கும் வகையில் இயக்க முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.