

சென்னை,
திமுக எம்.பி.கனிமொழி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கவும் இந்தியாவில் உள்ள மாநிலங்களின் உரிமைப் போராட்டத்திற்கு வழிகாட்டும் வகையிலும் கழக ஆட்சியில் நீதியரசர் திரு. குரியன் ஜோசப் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட ஒன்றிய-மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழுவைத் தவெக அரசு கலைத்திருப்பது கண்டனத்திற்குரியது.
ஏற்கனவே இந்தக் குழு மத்திய-மாநில உறவுகள் குறித்த தங்களது ஆய்வறிக்கையின் முதல் பாகத்தைச் சமர்ப்பித்துவிட்ட நிலையில், குழுவின் பணி முழுமையாக நிறைவடைவதற்கு முன்பே கலைப்பதற்கான அவசியம் என்ன? மாநில சுயாட்சிக் கொள்கையின் மீதான வெறுப்பா? இல்லை டெல்லி தலைமையின் உத்தரவா?
மாநில தன்னாட்சி உரிமையைப் பாதுகாப்போம் என்று வசனம் பேசிக்கொண்டே மாநில சுயாட்சிக்குக் குழிபறித்திருக்கிறது தவெக அரசு. இந்தியாவில் கூட்டாட்சி அரசியலை வலுப்படுத்துவதற்கான தமிழ்நாட்டின் முன்னெடுப்பைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது என அதில் பதிவிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து தமிழ்நாடு மக்கள் மீதும், அவர்களின் உரிமைகள் மீதும் இந்த அரசிற்கு எந்த அக்கறையும் இல்லை என கனிமொழி ராஜாத்தி கருணாநிதி எம்.பி கூறியுள்ளார்.
இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி ராஜாத்தி கருணாநிதி அப்போது பேசிய அவர் - தலைவர் கலைஞர் அவர்களின் ஆட்சிக்காலத்திலேயே, ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான அதிகாரங்கள் மற்றும் உறவுமுறைகள் குறித்து ஆய்வு செய்வதற்காகத் தனிக் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, மாநிலத்தின் உரிமைகளுக்காகப் போராடுவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்துள்ளோம்.
அதேபோன்று, கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சராக இருந்த அண்ணன் தளபதி அவர்கள், இந்த விவகாரம் குறித்து விரிவான மற்றும் ஆழமான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், மாநிலத்தின் உரிமைகளுக்காக நாம் முன்வைக்க வேண்டிய கோரிக்கைகள் மற்றும் மாற்றங்கள் குறித்து தெளிவான பரிந்துரைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் கருதி ஒரு குழுவை அமைத்தார்.
அக்குழு தனது முதற்கட்ட ஆய்வறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ள இந்தச் சூழலில், அந்தக் குழு தேவையற்றது என்று கூறி அதனை நிராகரிப்பது, சில தரப்பினரை மகிழ்விப்பதற்காகவும், தங்களுக்குள் இருக்கும் அச்சத்தின் காரணமாகவுமே இந்தக் குழுவைக் கலைத்துள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.
தமிழ்நாட்டின் மீதும், தமிழ் மக்களின் உரிமைகள் மீதும், ஒரு மாநிலத்தின் உரிமைகள் மீதும் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு எவ்வித அக்கறையும் இல்லை; கவலையும் இல்லை. அதுமட்டுமின்றி, ஒன்றிய அரசின் செயல்பாடுகளை எதிர்த்துக் கேள்வி எழுப்புவதற்கான துணிவும் தங்களிடம் இல்லை என்பதை இந்த நடவடிக்கையின் மூலம் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.