

சென்னை,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் மற்றும் விஞ்ஞானி பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட காலிப் பணியிடங்களையும் நிரப்புவதற்கான சிறப்பு நேரடி ஆட்சேர்ப்பு முகாமை உடனடியாகத் தொடங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 1971ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. கல்வி, நிர்வாகம் மற்றும் நிதி ஆகிய துறைகளில் தன்னாட்சியுடன் செயல்பட்டு வரும் இப்பல்கலைக்கழகம், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (ICAR) மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு (UGC) வகுத்துள்ள விதிமுறைகளின் அடிப்படையில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கப் பணிகளில் தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறது.
கடந்த 20 ஆண்டுகளில் பல்கலைக்கழகம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது. 2003ஆம் ஆண்டு 4 உறுப்புக் கல்லூரிகள் மற்றும் 5 இளநிலைப் பட்டப்படிப்புகள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது 19 உறுப்புக் கல்லூரிகள், 15 வேளாண் அறிவியல் நிலையங்கள் (KVKs), 42 ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் மையங்களுடன் செயல்பட்டு வருகிறது. மேலும் 10 இளநிலைப் பட்டப்படிப்புகள், 34 முதுநிலைப் பட்டப்படிப்புகள், 28 முனைவர் பட்டப்படிப்புகள் மற்றும் 3 பட்டயப் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆனால், இந்த விரிவாக்கத்திற்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்கள் போதுமான அளவில் உயர்த்தப்படவில்லை. உதவிப் பேராசிரியர் பணியிடங்களின் அங்கீகரிக்கப்பட்ட எண்ணிக்கை 1,187 இலிருந்து 1,416 ஆக மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. கல்வி, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கப் பணிகளின் பரப்பளவு பெரிதும் அதிகரித்துள்ள நிலையில், ஆசிரியர்களின் பணிச்சுமையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
நிரந்தர உதவிப் பேராசிரியர் ஆட்சேர்ப்பு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறவில்லை. கடைசியாக 2014ஆம் ஆண்டு 116 உதவிப் பேராசிரியர்கள் நேரடி ஆட்சேர்ப்பு மூலம் நியமிக்கப்பட்டனர். அப்போது நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் 2026ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இணைப் பேராசிரியர் நிலைக்கு பதவி உயர்வு பெற உள்ளனர்.
இதனால் உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் மேலும் காலியிடங்கள் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது பல்கலைக்கழகத்தில் 861 நிரந்தர ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 497 பேர் 60 வயதுக்குட்பட்டவர்களாகவும், 364 பேர் மட்டுமே 50 வயதுக்குட்பட்டவர்களாகவும் உள்ளனர்.
பல்கலைக்கழகத்தில் சுமார் 600 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. கடுமையான ஆசிரியர் பற்றாக்குறையால் கல்வி, ஆராய்ச்சி, விரிவாக்கம், ஆலோசனை மற்றும் தொழில்நுட்பப் பரவல் நடவடிக்கைகளின் தரம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக நிரந்தர ஆட்சேர்ப்பு நடைபெறாத நிலையில், தற்காலிக ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கற்பித்தல் உதவியாளர்கள் ஆகியோர் நிரந்தர ஆசிரியர்களுக்கு இணையான கல்வி, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கப் பொறுப்புகளை வகித்து வருகின்றனர்.
NET தகுதி, முனைவர் பட்டம், ஆராய்ச்சி அனுபவம் மற்றும் சிறந்த கல்விச் சாதனைகள் கொண்ட 3,500-க்கும் மேற்பட்ட தகுதியான இளைஞர்கள் கடந்த 12 ஆண்டுகளாக நிரந்தர வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். இவர்களில் சுமார் 1,969 பேர் தற்போது 35 வயதைக் கடந்தவர்களாக உள்ளனர்.
எனவே, உதவிப் பேராசிரியர் மற்றும் விஞ்ஞானி பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட காலிப் பணியிடங்களையும் நிரப்புவதற்காக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மானியக்குழுவின் நேரடி மேற்பார்வையில் சிறப்பு நேரடி ஆட்சேர்ப்பு முகாமை உடனடியாகத் தொடங்க தமிழ்நாடு அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.