தேர்தல் வாக்குறுதி படி கடனை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்; தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

வேளாண் கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள பயிர்க்கடன் தள்ளுபடியை தமிழக முதல்வர் நேற்றைய மாலை அறிவித்துள்ளார்.
விவசாயிகள்
Image Credits:PTI
Published on

சென்னை,

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி காட்சி மற்றும் செய்தி ஊடகங்களுக்கு கொடுத்த செய்தியில் தெரிவித்திருப்பதவாது:-

வேளாண் கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள பயிர்க்கடன் தள்ளுபடியை தமிழக முதல்வர் நேற்றைய மாலை அறிவித்துள்ளார்.

தன் தேர்தல் வாக்குறுதியில், 5 ஏக்கர் வரை சிறுகுறு விவசாயிகளின் கூட்டுறவு வங்கி கடன்கள் அனைத்தும் முழு தள்ளுபடி... இதர விவசாயிகளுக்கு 50 சதம் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தவர், விவசாயிகளை இப்பொழுது வஞ்சித்துள்ளார். இது வாக்குறுதி அல்ல... உத்தரவாதம் என்றும் அப்போது கூறினார்.

கடன் தள்ளுபடிக்கு கடன் நிலுவை தொகையில் சீலிங் வைக்கப்படுவது இதுவரை இல்லாத புதிய முறையாகும். ஒவ்வொரு சீலிங்க்-லும் குறு விவசாயிகளுக்கு அறிவித்துள்ள கடன் தள்ளுபடியில் 50 சதம் தான் சிறு விவசாயிகளுக்கு தள்ளுபடி.. என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு ஏக்கர் கரும்பு சாகுபடிக்கு ரூபாய் 60,000....ஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்கு 36 ஆயிரம் வங்கிகள் கடனாக கொடுப்பதாக பதிவு செய்யப்படுகிறது. ஆனால் இவர்களுக்கு இப்போது தள்ளுபடிகள் அறிவித்து இருப்பது 5000 ரூபாய் மட்டுமே. இதுவரை நிலம் சீலிங் அளவாகக் கொண்டு பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. புதிய முதல்வர் புதிய நிலையில் கடன் தொகையை அளவாகக் கொண்டு விவசாயிகளை ஏமாற்றியுள்ளார்.

கடந்த காலங்களில் ஒன்றிய அரசு 71 ஆயிரம் கோடி ரூபாய் : தமிழக அரசு இரு தடவை 12000 கோடி மற்றும் 7000 கோடி ரூபாய் என்று தள்ளுபடி செய்துள்ளது. அப்போது எல்லாம் இந்த சீலிங் கிடையாது. அதுவும் இப்போதைய தள்ளுபடி கூடுதல் தொகை 2000 கோடி ரூபாய் மட்டுமே.

தமிழ்நாடு அரசின் நிதி இருப்பு தெரிந்து தானே அப்பொழுது வாக்குறுதி அளித்திருக்க வேண்டும். மேலும் கூட்டுறவு வங்கிகள் விவசாயிகள் கொடுக்கும் சிட்டா அடங்கல் பரப்பளவு முழுவதற்கும் பயிர்க்கடன் கொடுப்பதில்லை. சான்றுகளில் உள்ள பரப்பளவில் 30 சதம் அளவிற்குரிய கடன் தான் கொடுக்கப்படுகிறது.இந்த நிலையில் கொடுக்கப்படும் சிட்டா அடங்கலை கணக்கில் கொள்ளாமல், விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் கடன் தொகையை அளவாக கொண்டு தள்ளுபடி அறிவிப்பு வேண்டும்.மேலும் குறு விவசாயிகள் பெரும்பாலும் கடன் பெறுவதில்லை. இவர்களுக்கு தாராளமாக வங்கிகளும் கடன் கொடுப்பதில்லை. எனவே குறு விவசாயிகள் பயன்பெறுவோர் குறைவு.

எனவே முதல்வர் தேர்தல் கால வாக்குறுதிப்படியே சிறுகுறு விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடியும்.... இதர விவசாயிகளுக்கு 50 சதம் தள்ளுபடியும் மறு ஆய்வு செய்து அறிவித்திட வேண்டும். இதன் பின் உள்ள கடன் நிலுவையை ஒத்தி வைத்திட வேண்டும். எந்த நிபந்தனையும் இல்லாமல் புதிய பயிர்க்கடன் வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com