பெண்களுக்கு ரூ.1,000 உதவி தொகையை அரசு உடனே வழங்க வேண்டும் தே.மு.தி.க. மகளிரணி தீர்மானம்

பெண்களுக்கு ரூ.1,000 உதவித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று தே.மு.தி.க. மகளிரணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெண்களுக்கு ரூ.1,000 உதவி தொகையை அரசு உடனே வழங்க வேண்டும் தே.மு.தி.க. மகளிரணி தீர்மானம்
Published on

சென்னை,

தே.மு.தி.க. மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

* இன்றைக்கு பெண்கள் சுதந்திரமாக நடமாடுகின்ற நிலை இல்லாமல் செயின் பறிப்பு போன்ற கொள்ளை, கொலை சம்பவங்கள் நாட்டில் பரவலாக நடைபெறுவதை தே.மு.தி.க. வன்மையாக கண்டிப்பதுடன் பெரும்பான்மையான இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை அமைத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.

* அண்டை மாநிலங்களில் நீட் தேர்வு குறித்து எந்தவொரு குழப்பமும் இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் தான் நீட் தேர்வினால் மாணவ-மாணவிகளை குழப்பி தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். எனவே மாணவ-மாணவிகளை நீட் தேர்வின் குழப்பத்தில் இருந்து தமிழக அரசு காப்பாற்றிட வேண்டும்.

ரூ.1,000 உதவித் தொகை

* ரஷியா தொடுக்கும் போரால் உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பும் தமிழக மருத்துவ மாணவர்கள் தமிழகத்தில் தங்கள் படிப்பை தொடர தமிழக அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொண்டு உதவிட வேண்டும்.

* தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்ற உறுதி இன்றைக்கு காற்றில் பறக்க விடப்பட்டு இருக்கிறது. தேர்தல் வாக்குறுதிப்படி பெண்களுக்கு ரூ.1,000 உதவி தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

தாலிக்கு தங்கம் திட்டம்

* பெண்கள் தங்கள் புனிதமான தாலியிலாவது தங்கத்தை பார்க்கும் வகையில் தாலிக்கு தங்கம் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்திட வேண்டும்.

* ஹிஜாப் உடை அணியலாமா? வேண்டாமா? என்ற ஒரு கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் தே.மு.தி.க.வை பொறுத்தவரையில் இஸ்லாமிய பெண்களுக்கு உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும், அவர்கள் மதம் மற்றும் மன உணர்வை போற்றக்கூடியவர்களாகவும், என்றைக்கும் பக்கபலமாகவும் இருப்போம் என்று இந்த உலக மகளிர் தினத்தையொட்டி உறுதி ஏற்போம்.

மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com