

நெல்லை,
தாமிரபரணி ஆற்றில் கழிவுகள் கலப்பதை தவெக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என சவுமியா அன்புமணி கூறியுள்ளார்.
பசுமைத் தாயகம், சென்னை வாழ் நெல்லை மக்கள் நலச்சங்கம் சார்பில் தாமிரபரணியின் நலன் விரும்பிகளுக்கு பாராட்டு விழா மற்றும் விவசாயிகள் சந்திப்பு விழா திருநெல்வேலி அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் இன்று நடைபெற்றது. பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி எம்எல்ஏ சிறப்புரையாற்றினார்.
முன்னதாக, திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றுப் பகுதியில் ஆய்வு செய்த சவுமியா அன்புமணி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
ஆளுங்கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அந்த கோரிக்கையை மற்ற கட்சிகள் ஏற்றுக்கொள்ளாமல் தங்களது கட்சி சார்பில் தனித்தனியாக வேட்பாளர்களை களமிறக்கியது.
இதன் காரணமாகவே இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிப்பதில்லை என்ற நிலைப்பாட்டை பாட்டாளி மக்கள் கட்சி எடுத்தது. குறிப்பாக மதுராந்தகம் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஆதரவான மக்கள் ஏராளமானோர் உள்ளனர். தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,
தமிழக அரசிடம் தாமிரபரணியை முழுமையாக சுத்தப்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை விரைவில் தாக்கல் செய்ய வலியுறுத்துவோம். ஆற்றில் கழிவுகள் கலப்பதை அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், தென் தமிழகத்தின் முக்கிய ஜீவநதியான தாமிரபரணியை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்க வேண்டும். ரூ.59 கோடி திட்டத்தை முறையாக பயன்படுத்த வேண்டும்
தாமிரபரணி ஆற்றின் அருகில் எந்தவிதமான கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளப்படாது என்ற உறுதியை திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சமீபத்தில் தெரிவித்துள்ளார். அதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜெர்மன் வங்கி உதவியுடன் கிடைக்கும் ரூ.59 கோடி நிதியை வெறும் கட்டுமானப் பணிகளுக்காக பயன்படுத்தாமல், தாமிரபரணியின் கரையில் உள்ள பழமையான கல் மண்டபங்கள், படித்துறைகள் உள்ளிட்ட பாரம்பரிய சின்னங்களை சீரமைக்கவும், ஆற்றைப் பாதுகாக்கவும் பயன்படுத்த வேண்டும். தென்னகத்தின் காசி என்று அழைக்கப்படும் தாமிரபரணி ஆற்றங்கரை தற்போது மாசடைந்து காணப்படுவது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
தாமிரபரணியின் தூய்மை மற்றும் பாரம்பரியத்தை பாதுகாக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் தாமிரபரணி வெறும் ஆறு அல்ல; தென் தமிழகத்தின் வாழ்வாதாரம் மற்றும் பண்பாட்டு அடையாளம். அதை பாதுகாப்பது அனைவரின் கடமை.
இவ்வாறு அவர் கூறினார்.