

சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
புதிய கல்வியாண்டு தொடங்கவிருக்கும் வேளையில், தமிழகத்திலுள்ள முக்கிய பல்கலைக்கழகங்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
ஐந்தாண்டு காலமாக பேராசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் முந்தைய திமுக அரசு மெத்தனமாக செயல்பட்டதால், இன்று, பழம்பெருமை மிக்க மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 96 சதவீத பேராசிரியர் பணியிடங்களும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 92.9 சதவீத பேராசிரியர் பணியிடங்களும், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 74.4 சதவீத துணைப் பேராசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. இப்படி பேராசிரியர்களே இல்லாமல், மாணவர்களின் கல்வியைச் சிதைத்து, ஆராய்ச்சித் திறனைப் பறித்து, வேலைவாய்ப்புகளைக் குறைத்து, தமிழகத்தின் எதிர்காலத்தையே சீரழித்ததால்தான் திமுக அரசு தமிழக மக்களால் துரத்தியடிக்கப்பட்டது.
இந்நிலையில், தங்களது கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வசம் உயர்கல்வித்துறை இருப்பதால் முதல்வர் விஜய் பேராசிரியர்களின்றி அல்லாடும் பல்கலைக்கழகங்களை கண்டுகொள்ளாமல் விடக்கூடாது! மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதல்-அமைச்சர் நேரடியாகத் தலையிட்டு போர்க்கால அடிப்படையில் பேராசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.