

சென்னை,
இந்திய மகளிர் கூடைப்பந்து அணியின் முன்னாள் தலைவி அனிதா பால்துரைக்கு, தமிழக பா.ஜ.க. சார்பில் சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பாராட்டு விழா நடந்தது. அதில் அவர் கவுரவிக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சியில், அனிதா கார் வாங்குவதற்கு தமிழக பா.ஜ.க. சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அண்ணாமலை கூறினார்.
இதன்பின், செய்தியாளர்களுக்கு அண்ணாமலை அளித்த பேட்டியில், மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்ததை அடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 ரூபாயும், டீசல் 5 ரூபாயும் குறைந்தது. அதை பின்பற்றி பல மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளன. ஆனால், தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக தெரிவித்தும் கூட, பெட்ரோல், டீசல் விலையை தி.மு.க. குறைக்காமல் உள்ளது.
தமிழக மக்களை முட்டாளாக்கி ஏமாற்றி, ஆட்சிக்கு வந்திருப்பது உண்மையாகி விட்டது. காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சிதம்பரம், பெட்ரோல், டீசல் விலை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை. அவரே விலை உயர காரணம். தமிழக கடன் சுமை எவ்வளவு என்று தெரிந்து தான், தி.மு.க. தேர்தல் வாக்குறுதி அளித்தது. தற்போது, தமிழக அரசின் கடன் சுமை 5.10 லட்சம் கோடி ரூபாய். இந்த ஆண்டு 70 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்க உள்ளது.
ஒரு மாநிலம், அதன் மாநில மொத்த உற்பத்தியில் 25 சதவீதம் தான் கடன் வாங்க முடியும். இந்த அளவு அடுத்த ஆண்டு எட்டப்படும். இதே நிலை தொடர்ந்தால், வருகிற 2023ம் ஆண்டில் அரசு அதிகாரிகளுக்கு மாத சம்பளம் வழங்க அரசிடம் பணம் இருக்காது என்று கூறியுள்ளார்.