பால் உற்பத்தியாளர்களின் வாழ்வில் வளமும், மகிழ்ச்சியும் பெருகிட அரசு துணை நிற்கும்: முதல்-அமைச்சர் விஜய்

தேசிய பால் தினத்தையொட்டி, பால் உற்பத்தி சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகள் என்று தமிழக முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்-அமைச்சர் விஜய்.
Published on: 

சென்னை,

பால் உற்பத்தியாளர்களின் வாழ்வில் வளத்தையும், மகிழ்ச்சியையும் பெருக்கிட நமது அரசு என்றும் துணை நிற்கும் என்று தமிழக முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

தேசிய பால் தினம்: முதல்-அமைச்சர் விஜய் பதிவு

தேசிய பால் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:

வெண்மைப் புரட்சி மூலம், நாட்டின் பால்வளத்தைப் பெருக்குவதில் பெரும்பங்காற்றிய டாக்டர் வர்கீஸ் குரியன் அவர்களின் பிறந்த நாளை நினைவுகூரும் தேசிய பால் தினத்தில், பால் உற்பத்தி சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பால் உற்பத்தியின் மூலம் கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்கும் விவசாயப் பெருமக்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்களின் உழைப்பும், அர்ப்பணிப்பும் நாட்டின் உணவுப் பாதுகாப்பிலும், ஊட்டச்சத்து மேம்பாட்டிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

நமது அரசு, பால் உற்பத்தியாளர்களின் நலனைக் காத்திடும் வகையில் பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 6 ரூபாய் உயர்த்தி வழங்கியதோடு, ஊரகப் பகுதிகளில் வாழும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில், பால் உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு, பால் உற்பத்தியாளர்களின் வாழ்வில் வளத்தையும், மகிழ்ச்சியையும் பெருக்கிட நமது அரசு என்றும் துணை நிற்கும்!.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X