பா.ஜனதாவை கவர்னர் அழைத்து இருப்பது ஜனநாயக படுகொலை

கர்நாடகாவில் ஆட்சி அமைக்க பா.ஜனதாவை கவர்னர் அழைத்து இருப்பது ஜனநாயக படுகொலை என திருமாவளவன் தெரிவித்தார்.
பா.ஜனதாவை கவர்னர் அழைத்து இருப்பது ஜனநாயக படுகொலை
Published on

ஆலந்தூர்,

சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது.

கர்நாடகா பொது தேர்தலில் ஆட்சி அமைக்க கூடிய பெரும்பான்மையை பாரதீய ஜனதா கட்சி பெறவில்லை. தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும், பா.ஜனதாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்து இருப்பது ஜனநாயக படுகொலை ஆகும். இதை எந்த வகையிலும் ஏற்க முடியாது.

யாரால், எந்த அணியால் நிலையான ஆட்சி அமைக்க முடியுமோ அவர்களை அழைக்க வேண்டியது சட்ட நடைமுறையாகும். கவர்னர் ஒருதலைபட்சமாக பாரதீய ஜனதா கட்சியை ஆட்சி அமைக்க அழைத்திருப்பது ஜனநாயக குரல் வளையை நெரிப்பதாக இருக்கிறது. இதை விடுதலை சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது.

மணிப்பூர், கோவா, மேகாலயா ஆகிய 3 மாநிலங்களில் தேர்தல் நடந்தபோது மிகவும் குறைவான இடங்களில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா கட்சியை ஆட்சி அமைக்க கவர்னர்கள் அழைத்தனர். மேகாலயாவில் பாரதீய ஜனதா 2 இடங்களில்தான் வெற்றி பெற்றது. ஆனால் அதை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்தார்.

அங்கு ஒரு நீதி, கர்நாடகாவில் ஒரு நீதி என்பது மத்திய அரசு எந்தளவுக்கு கவர்னர்களை தங்கள் எடுபிடிகளாக, கைப்பாவைகளாக வைத்து இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். இது வேதனைக்குரியது.

ஜனநாயகத்தை பாதுகாக்க ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தேவையை இது உணர்த்துகிறது. சுப்ரீம் கோர்ட்டில் நாளைய(இன்று) தீர்ப்பை பொறுத்திருந்து பார்ப்போம். இந்தியாவில் பாரதீய ஜனதா கட்சி கலாசார பாசிசத்தை கட்டி எழுப்பி வருகிறது. அரசியலிலும் கொடுங்கோன்மையை நிலை நாட்டி வருகிறது. இது தேசத்திற்கு ஆபத்தானது.

தென்னிந்தியாவில் பா.ஜனதாவால் கால் ஊன்ற முடியாது. குறிப்பாக தமிழகத்தில் குட்டிக்கரணம் போட்டாலும் முடியாது. ஆளும் கட்சியான அ.தி.மு.க. சிவப்பு கம்பளம் விரித்தாலும் வாய்ப்பு கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com