எதிர்கட்சி தலைவர்போல் அறிக்கை வெளியிடும் கவர்னர்: அமைச்சர் தா.மோ.அன்பரசன்

இந்தியாவில் உள்ள அனைத்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுமே பெரும் அழுத்தத்தில் உள்ளது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
கவர்னர் ஆர்.என்.ரவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பெரும் அழுத்தத்தில் உள்ளதாகவும், தொழில் முனைவோர்கள் தங்கள் நிறுவனங்களை அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்லும் கட்டாயத்திற்கு தள்ளப்படுள்ளனர் என்றும், இந்தியாவில் 55 மில்லியன் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பதிவு செய்துள்ளது எனவும், அதில், தமிழ்நாட்டில் 4 மில்லியன் நிறுவனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
கவர்னர் ஆர்.என்.ரவி எவ்வித ஆதாரம் இன்றியும், புள்ளிவிவரங்கள் இல்லாமலும் தமிழகத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களையும், தமிழ்நாடு அரசையும் அவமதிக்கும் வகையில் அவதூறுகளை அள்ளி வீசியுள்ளார்.
இன்று (20.1.2026) வரை நாட்டில் 4,51,01,634 (45 மில்லியன்) குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மத்தியஅரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் (https://dashboard.msme.gov.in) குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கவர்னர் 55 மில்லியன் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என எதை வைத்து கூறுகிறார் என தெரியவில்லை.
இதே இணையதளத்தில், நாட்டில் குஜராத் மாடல் என்று அவர்களால் கூறப்படும் மத்தியிலும் - மாநிலத்திலும் ஒரே ஆட்சியில் உள்ள குஜராத் மாநிலத்தில் 29,13,816 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களே பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை விட பெரிய மாநிலமான உத்திரபிரதேசத்தில் 47,17,342 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஒன்றிய அரசின் எவ்வித உதவியும் இன்றி அரசியல் அழுத்தங்களையும் மீறி, தமிழ்நாட்டில் 40,13,701 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பதிவு செய்துள்ள சூழலை உருவாக்கியுள்ளார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் என்பது அந்தந்த இடங்களில் கிடைக்க கூடிய மூலப்பொருட்களை ஆதராங்களாக கொண்டு உற்பத்தி செய்யும் நிறுவனங்களாகவும், பெரு நிறுவனங்களுக்கு உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களாகவும் உள்ளதால், அந்நிறுவனங்கள் வெளிமாநிலங்களுக்கு செல்ல எவ்வித அவசியமும் இல்லை. எவ்வித ஆதாரங்களும் இன்றி குறை கூற வேண்டும் என்ற ஓரே நோக்கத்திற்காகவே கவர்னர் குறைக் கூறியுள்ளார்.
கவர்னர் அறிக்கையில், தமிழ்நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பெரும் அழுத்தத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி வரி, அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளுடனான தவறான வெளியுறவுக் கொள்கைகளால் தமிழ்நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மட்டும் அல்ல: இந்தியாவில் உள்ள அனைத்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுமே பெரும் அழுத்தத்தில் உள்ளது.
கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில், ரூ.3,617 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையின் வளர்ச்சிக்கு தனி கவனம் செலுத்தி, 5 ஆண்டுகளில், ரூ. 6,625 கோடி நிதி ஒதுக்கி சாதனை படைத்துள்ளார். கவர்னர் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையை தமிழ்நாடு அரசு புறக்கணித்துள்ளது என உண்மைக்கு புறம்பாக கூறியுள்ளார்.
இந்தியாவில் மற்ற மாநிலங்களும் பின்பற்றும் வகையில், முதல்-அமைச்சரால் செயல்படுத்தப்பட்ட சிறப்பான திட்டங்களால் பொருளாதார வளர்சியில் குஜராத், மகாராஷ்ரா மாநிலங்களை பின்னுக்கு தள்ளி இந்தியாவிலேயே தமிழ்நாடு இரட்டை இலக்க வளர்சியான 11.19 சதவீதம் பெற்று முதல் இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டின் கவர்னராக இருந்து கொண்டே தமிழ்நாட்டின் வளர்ச்சியை அறியாமல் ஒரு எதிர்கட்சி தலைவர்போல் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அறிக்கையை வெளியிடுவது ஆச்சரியமாக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






