கவர்னர் உரை ஏமாற்றம் அளிக்கிறது: தமிழகத்திற்கு தேவையான முக்கிய முன்னோடி திட்டங்கள் எதுவும் இடம் பெறவில்லை

தமிழகத்திற்கு தேவையான முக்கிய முன்னோடி திட்டங்கள் எதுவும் கவர்னர் உரையில் இடம் பெறவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கவர்னர் உரை ஏமாற்றம் அளிக்கிறது: தமிழகத்திற்கு தேவையான முக்கிய முன்னோடி திட்டங்கள் எதுவும் இடம் பெறவில்லை
Published on

சென்னை,

கவர்னர் உரையில் வழக்கமாக அரசின் முன்னோடி திட்டங்கள் இடம்பெறும். ஆனால் இன்றைய கவர்னர் உரையிலே அப்படிப்பட்ட முக்கியமாக முன்னோடி திட்டங்கள் எதுவும் இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது. சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது 505 அறிவிப்புகளை தி.மு.க. வெளியிட்டது. ஆனால் அதிலுள்ள முக்கியமான வாக்குறுதிகள் கூட கவர்னர் உரையில் இடம்பெறவில்லை என்பது ஏமாற்றத்தை அளிக்கிறது.

நீட் தேர்வு

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் அதை ரத்து செய்யாமல் ஒரு குழுவை அமைத்து, அதன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிலையை மாற்றி கூறுகிறார். 2 நாட்களுக்கு முன்பு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் இன்னும் நீட் தேர்வு முடிவுக்கு வரவில்லை, அதனால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தேர்தல் வருதற்கு முன்பு ஒரு பேச்சு, தேர்தல் முடிந்தபிறகு ஒரு பேச்சாகத்தான் உள்ளது.

எங்கள் ஆட்சியில் பல விவசாயிகளின் பயிர்க்கடனை ரத்து செய்து அதற்கு உண்டான சான்றிதழை வழங்கினோம். ஆனால் இந்த ஆட்சியில் இன்னும் முழுமையாக விவசாயிகளின் பயிர்க்கடனை ரத்து செய்த ரசீது வழங்கவில்லை. இப்போது பருவமழை தொடங்கி விட்டது. அவர்களுக்கு புதிய பயிர்க்கடன் வழங்கப்பட வேண்டும்.

கடன் தள்ளுபடி

மாணவர்கள் தேசிய வங்கிகள், கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய கடன் ரத்து செய்யப்படும்; 5 பவுனுக்கு குறைவாக கூட்டுறவு சங்கத்திலும், தேசிய வங்கிகளிலும் விவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்; தேசிய வங்கிகள் மூலமாக மகளிர் சுயஉதவி குழுக்கள் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தலின்போது அளித்த தி.மு.க.வின் வாக்குறுதிகள், கவர்னர் உரையில் இல்லை.

குடும்பத்தலைவிக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும், முதியோர் உதவித்தொகை ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்கப்படும், கியாஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும், மீன்பிடி தடை காலங்களிலே மீனவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும் ஆகிய தேர்தல் வாக்குறுதிகள் அதில் இல்லை.

கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் குறித்த ஒரு வரிகூட கவர்னர் உரையில் இல்லை. இது ஏமாற்றம் அளிக்கிறது. இது விவசாயிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக உள்ளது.

கொரோனா தொற்று பரவல்

கொரோனா தொற்று பரவலை தி.மு.க. அரசு சரியான முறையில் கட்டுப்படுத்தாத காரணத்தினால் தொற்றுப்பரவல் படிப்படியாக குறைந்து வருகிறதே தவிர முழுமையான கட்டுப்பாட்டிற்கு வரவில்லை.

சேலம் தெற்கு எம்.எல்.ஏ. சட்டசபைக்கு வருவதற்காக சேலம் மாநகராட்சியில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அவருக்கு முடிவு பாசிட்டிவ் என்று சான்று அளித்துள்ளார்கள். ஆனால் அவர் சந்தேகத்தின் பேரில் தனியார் ஆஸ்பத்திரியில் ஆர்.டி.பி.சி.ஆர். மற்றும் ரத்த மாதிரி பரிசோதனை செய்தார். அதில் நெகட்டிவ் என்று முடிவு வந்துள்ளது. தி.மு.க. அரசு நிர்வாக திறமையற்ற அரசு என்பதற்கு இதுவே ஒரு உதாரணம்.

7 பேர் விடுதலை

தமிழகத்தின் தற்போதைய நிதிநிலை குறித்து அடுத்த மாதம் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று கவர்னர் உரையில் கூறியிருந்தாலும், அதை வெளியிடுவார்களா? என்பது தெரியவில்லை. பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் இருப்பதற்கு தமிழகத்தின் நிதி நிலைமைதான் காரணம் என்று இப்போது காண்பிக்கிறார்கள்.

ஆனால் எங்கள் ஆட்சியில் இருந்த நிதிநிலை பற்றி பட்ஜெட்டில் தெளிவாக சமர்பிக்கப்பட்டு உள்ளது. அதைப்பார்த்த பிறகுதான் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று தி.மு.க. அறிவித்தது. ஆனால் விலையை குறைக்க இப்போது மறுக்கிறார்கள்.

அ.தி.மு.க. அரசை பொறுத்தவரை 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று அமைச்சரவையில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டு பேரவையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைத்தோம். இதுகுறித்து டெல்லி சென்றபோது ஏன் வற்புறுத்தவில்லை? என்று என்னை கேட்காமல் முதல்-அமைச்சரிடம் கேளுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஓ.பன்னீர்செல்வம்

கவர்னர் உரை குறித்து, சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட முக்கியமான திட்டங்கள் இடம்பெறவில்லை என்றும், கவர்னர் உரை உறுதிப்பாடு இல்லாத குழப்பமான உரை என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com