

சென்னை,
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
மாநில உரிமை, பெண்களின் நலன் மற்றும் பாதுகாப்பு, சமூக நீதி, சமவாய்ப்பு, மாற்றுத்திறனாளிகள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், திருநங்கையர் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோரின் நலன், கல்வி, மருத்துவம் மற்றும் சுகாதாரம் உள்ளடக்கிய ஆட்சி என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டு, தவெக அரசால் தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரின் உரை, தங்க முலாம் பூசப்பட்ட தகரமாகவே அமைந்திருக்கிறது.
"மக்களே நாட்டின் உண்மையான எஜமானர்கள்" என்ற பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் வரிகளோடு தொடங்கியிருக்கும் கவர்னரின் உரையில், காலப்போக்கில் அனைத்து இந்தியாவிற்கும் ஒரு பொதுத் தொடர்பு மொழி உருவாக வேண்டும் என்ற அவரின் முக்கியமான வாதத்தை மறைத்து, தமிழ்நாட்டு மாணவ-மாணவியர்கள் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மூன்றாவது மொழியைப் பயில தடையை ஏற்படுத்தும் வகையில், "இருமொழிக் கொள்கையே தொடரும்" என அறிவிப்பதும், தேசிய கல்விக் கொள்கையின் அம்சங்களை ஆராயாமல் கண்மூடித்தனமாக எதிர்ப்பது மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
உயர்நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்குதல், உச்சநீதிமன்றக் கிளையை சென்னையில் அமைத்தல், கல்வியைப் பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றுதல், மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு, நதிகள் இணைப்பு ஆகியவற்றிற்கு எந்தவித முயற்சியையும் மேற்கொள்ளாமல், கடந்த கால கவர்னர்களின் உரையில் இருக்கும் விவரங்களை அப்படியே 'Cut, Copy, Paste' செய்திருப்பது வழக்கமான சம்பிரதாய நடவடிக்கையாகவே பார்க்க வேண்டியுள்ளது.
காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டி, தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களைப் பாலைவனமாக்கும் கர்நாடக அரசாங்கத்தையும்; தென்மாவட்டங்களின் உயிர்நாடியான முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு, புதிய அணையைக் கட்டியே தீருவோம் எனக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் கேரள அரசாங்கத்தையும் கண்டிக்கக்கூட முடியாமல் இருப்பதன் மூலம் மாநிலத்தின் உரிமை மற்றும் விவசாயிகளின் நலனைத் தாண்டி, ஆட்சி எனும் நாற்காலியின் நான்காவது காலைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி மீதான தவெகவின் விசுவாசத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
கொத்துக் கொத்தாக அரங்கேறும் கொலை, கொள்ளை சம்பவங்களும், நூற்றுக்கும் அதிகமான குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்களுமே தவெகவின் கடந்த ஒரு மாத கால ஆட்சியின் அடையாளமாக மாறியிருக்கும் நிலையில், "பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதும், அவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதுமே இந்த அரசின் லட்சியம்" என கவர்னர் உரையில் குறிப்பிட்டிருப்பது கேலிக்கூத்தானது.
இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் தொடர் முயற்சியால் இன்றளவும் தமிழகத்தில் அமலில் இருக்கும் 69 சதவீத இடஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும், அனைத்து சமூக மக்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் உரிய வாய்ப்பு கிடைத்திடவும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட வேண்டும் எனப் பல்வேறு அரசியல் கட்சிகள் கொடுத்த அழுத்தத்தின் அடிப்படையில், தமிழகத்தில் சமூகநீதி சர்வே நடத்த தவெக அரசு முன்வந்திருப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது.
· குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 2500 ரூபாய் வழங்கும் மதிப்புமிகு மகளிர் திட்டம்,
· ஆண்டுக்கு ஆறு சிலிண்டர் வழங்கும் அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம்,
· தாலிக்குத் தங்கமும், தரமான பட்டுச் சேலையும் வழங்கும் அண்ணன் சீர் திட்டம்,
· அஞ்சலை அம்மாள் அதிவிரைவு பெண்கள் நீதிமன்றங்கள்,
· பிறக்கும் குழந்தைகளை வரவேற்கும் தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்...
எனக் கவர்ச்சிகள் நிறைந்த தவெக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றுவதற்கான உத்திரவாதமோ செயல்திட்டமோ கவர்னர் அறிக்கையில் இடம் பெறாமல் தவிர்க்கப்பட்டிருப்பது, மக்கள் மத்தியில் கடும் ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது. "தமிழகத்தின் நிதிநிலையைச் சீரமைத்த பின்னர்தான் வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்ற முடியும்" என்றால், தேர்தலுக்கு முன்பாகவே தமிழகத்தின் உண்மையான நிதிநிலையை அறிந்திருந்தும் மக்களை ஏமாற்றும் நோக்கில் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளிவீசியது ஏன்?
இறுதியாக, 1967ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணாவும், 1977ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும் நிகழ்த்திய ஆட்சி மாற்றத்தை வெறும் ஒப்பீட்டளவில் பேசாமல், அந்த இருபெரும் தலைவர்கள் நிகழ்த்திய சரித்திர சாதனைகளையும், தமிழக மக்களுக்குக் கொடுத்த நல்லாட்சியையும் பின்பற்றிட முன்வர வேண்டும் எனத் தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்க்கு அறிவுறுத்தும் இந்நேரத்தில், இன்றைய அரசு தயாரித்த கவர்னர் உரை தங்க முலாம் பூசிய தகரமாகவே இருந்தது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.